UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: போடி சவுடாம்பிகா பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் தேனி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி, பள்ளியை ஆய்வு செய்த அறிக்கையை மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார்.
தேனி மாவட்ட தமிழ்நாடு துவக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் சேரன். இவர் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், ‘போடி சவுடாம்பிகா பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. இங்குள்ள மண் சுவர் இடிந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
வக்கீல் கமிஷனரை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரினார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நேரில் ஆய்வுசெய்து பள்ளியில் தேவையான வசதிகள் இருப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஜெ.முகோபாத்யாயா, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச் முன்பு செப்., 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. முதன்மை செஷன்ஸ் நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் நகல்களை மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களின் வக்கீல்களுக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இம்மனு குறித்து அவர்கள் தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யவும், பள்ளி நிர்வாகம் தனது தரப்பு மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதி சம்பத் கமிட்டி அடிப்படையில் பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளனவா என அறிக்கையில் தகவல்களை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டது. வழக்கை செப்., 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.