சரிகிறது டி.சி.எஸ்., விப்ரோ நிறுவனங்களில் ஆள் எடுப்பு!
சரிகிறது டி.சி.எஸ்., விப்ரோ நிறுவனங்களில் ஆள் எடுப்பு!
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஏற்கனவே சர்வதேச நிதி தள்ளாட்டத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் போதுமான அளவில் சாப்ட்வேர் சேவை வர்த்தகத்தை செய்ய முடியாமல், பல நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. டி.சி.எஸ்., போன்ற சில பெரிய நிறுவனங்கள் மட்டும் தாக்கு பிடித்து வருகின்றன.
சர்வதேச அளவில் பல நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களிடம் தான் தங்கள் பணிகளை ஒப்படைத்துள்ளன.
சாப்ட்வேர் மூலம் செய்து தரப்படும் இந்த பணிகளுக்கான வருமானம் கடந்த சில ஆண்டாக குறைந்து வருகிறது. போதுமான சாப்ட்வேர் சேவையும் கிடைப்பதில்லை.
சாப்ட்வேர் சேவை அதிகரித்து வந்ததால், அதற்கேற்ப தகவல் தொழில்நுட்பம் படித்தவர்கள் அதிக அளவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்தனர். இந்த நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நேரடியாக மாணவர்களை தேர்வு செய்தும் வந்தன. ஆனால், 2006ல் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், கடந்தாண்டு மாணவர்களை தேர்வு செய்வதை குறைத்துக் கொண்டன.
கடந்தாண்டை விட, இந்தாண்டு 22 சதவீதம் குறைவாகவே மாணவர்களை ‘பிளேஸ்மென்ட்’ செய்தது இந்த நிறுவனங்கள். இனி வரும் ஆண்டில், தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று கடினமாக இருக்கும்.
பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். ஆண்டுதோறும் 18 ஆயிரம் பேருக்கு குறையாமல் வேலைக்கு எடுக்கும் டி.சி.எஸ்., அடுத்த ஆண்டு 20 சதவீதம் வரை குறைக்கும் என்று தெரிகிறது. இதுபோல, விப்ரோ உட்பட மற்ற முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களும் வேலைக்கு ஆள் எடுப்பதை குறைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
