UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: உணவு எண்ணெய் இறக்குமதிக்கு மீண்டும் வரி விதிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் எண்ணெய் வித்துப் பொருட்களின் விலை இறங்குமுகமாக உள்ளது. இது இந்திய மற்றும் உலக எண்ணெய் வித்துப் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நுகர்வோருக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், விவசாயிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், முதுநிலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீஅகிலா ஆகியோர் எண்ணெய் வித்துப் பொருட்களின் மீது தற்போது தளர்த்தப்பட்ட வரி விலக்கைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவு விபரம்:
இந்தியாவில் உணவு எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு 1.15 கோடி டன். தனி நபர் உட்கொள்ளும் அளவு ஆண்டுக்கு 11 கிலோ. இது வளர்ந்த நாடுகளின் அளவைக் காட்டிலும் மிகக்குறைவு. இந்தியாவில் சராசரியாக 80 லட்சம் டன் உணவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் 40 லட்சம் முதல் 60 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிக அளவில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், உள்நாட்டு எண்ணெய்வித்து உற்பத்தியாளர்கள், எண்ணெய் பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் உணவு எண்ணெய்க்கான வரிக்கொள்கை உலக வர்த்தக மையத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு உள்நாட்டு விவசாயிகள், பதனிடுவோர் மற்றும் நுகர்வோர் ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
உணவு எண்ணெய் வித்துப்பயிர்களின் தேவையை, உள்நாட்டு உற்பத்தியால் பூர்த்தி செய்ய முடியாததால், உணவு எண்ணெய் இறக்குமதிக்கான உரிமம் 1994ம் ஆண்டு ஏப்., முதல் பொது உரிமத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த உரிமத்தின்கீழ் பாமாயில் 65 சதவீத வரியுடன் இறக்குமதி செய்யப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச எண்ணெய் விலையைப் பொறுத்து வரிக் கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படும்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் உயர்ந்து வரும் விலையை கட்டுக்குள் வைக்க, கடந்த ஏப்., மாதம் சுத்திகரிக்கப்பட்ட உணவு எண்ணெயின் மீதான இறக்குமதி வரியை 7.73 சதவீதமாக, மத்திய அரசு குறைத்தது. மற்றும் சுத்திகரிக்கப்படாத உணவு எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முழுமையாக நீக்கியது.
இந்த இறக்குமதி கொள்கைகள் உள்நாட்டு சந்தையில் எண்ணெயின் புழக்கத்தை அதிகரித்து விவசாயிகளைக் கண்ணீரிலும், நுகர்வோரை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
வரியில்லாத எண்ணெய் இறக்குமதியால் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு பயனில்லை. இந்த வரிவிலக்கின் பலன், விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாத உயர், நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பு மக்களை மட்டுமே சென்றடைகிறது. இறக்குமதி வரி விலக்கு இந்தியாவில் 4.5 முதல் 5 கோடி எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளை பாதிக்கிறது.
இறக்குமதியை முற்றிலும் புறக்கணிக்க முடியாத சூழலில் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் பாதிக்காத வகையில் இறக்குமதி ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். உணவு எண்ணெய் விலை உயர்வைத் தடுக்க இறக்குமதி வரியை தளர்த்துவதை விட, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.
மேலும், இறக்குமதி வரி விதிப்பை மத்திய அரசு மீண்டும் உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
