தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடுத்த ஆண்டாவது அமலாகுமா சமச்சீர் கல்வி திட்டம்?

அடுத்த ஆண்டாவது அமலாகுமா சமச்சீர் கல்வி திட்டம்?

அடுத்த ஆண்டாவது அமலாகுமா சமச்சீர் கல்வி திட்டம்?


UPDATED : அக் 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி., ஆகிய பள்ளிகளில் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்த, முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழுவை அமைத்து, திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையையும் பெற்றுள்ளது. அரசு திட்டத்திற்கு தனியார் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தாலும், சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளது.
பொது மக்களும் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளனர். நடப்பு கல்வியாண்டிலேயே திட்டம் அமலாகும் என்று சட்டசபையில் அறிவித்தபோதும், தற்போது வரை அந்த திட்டம் இழுவை திட்டமாகத் தான் இருக்கிறது.
ஏற்கனவே நீண்ட ஆய்வை நடத்தி, அனைத்து தரப்பினரின் கருத்துக்களை பெற்றுள்ள நிலையில், திட்டம் தொடர்பாக மேலும் ஆய்வு நடத்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழமலை ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ‘ஒருநபர் குழு, மேலும் சில கல்வியாளர்களை இணைத்துக்கொண்டு மற்ற மாநிலங்களில் சமச்சீர் கல்வித் திட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை தரும். அதனடிப்படையில் மீண்டும் அமைச்சரவைக் கூடி விவாதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த குழு விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும், நான்கு கல்வியாளர்கள் இதில் இடம்பெறுவர் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனராக இருந்து பல புதிய திட்டங்களை கொண்டு வந்து, ஓய்வு பெற்றவருமான விஜயகுமார், இந்தக் குழுவில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட மூன்று பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த குழு மீண்டும் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்குள் நடப்பு கல்வியாண்டு முடிந்துவிடும். அடுத்த கல்வியாண்டிலாவது திட்டம் அமலுக்கு வருமா அல்லது இழுபறி தொடருமா என்பது போக போகத் தான் தெரியும். ‘சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் பழமலை தலைமையிலான குழு ஆய்வு செய்யும்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செயல்வழி கற்றல் திட்டத்தை ஆய்வு செய்வதற்கு அரசால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் இல்லை. அப்படியிருக்கும்போது இவர்கள் எந்த மாநிலத்திற்குச் சென்று ஆய்வு செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை.
ஏற்கனவே ஒரு குழுவை நியமித்து, அவர்கள் பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் என பல தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கை சமர்பித்துவிட்டனர்.
இதற்குப் பிறகும் மேலும் ஒரு கமிட்டி, ஆய்வு என்பது திட்டத்தை தாமதப்படுத்தும் செயல் போல தோன்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us