நிர்வாணப்படுத்தி சித்ரவதை: ‘ராகிங்’ மாணவர்கள் மீது நடவடிக்கை
நிர்வாணப்படுத்தி சித்ரவதை: ‘ராகிங்’ மாணவர்கள் மீது நடவடிக்கை
UPDATED : அக் 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சூலூர்: கோவை கருமத்தம்பட்டி அருகே கல்லூரி மாணவரை ‘ராகிங்’ செய்த, சீனியர் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை, கருமத்தம்பட்டியை அடுத்த சங்கோதிபாளையத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு, முதலாமாண்டு டூல்ஸ் பிரிவில் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சஞ்சய்(15). கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முகமது ஷபி, ஹனீஸ், மோகன் மற்றும் நந்தகுமார், விடுதியில் இருந்த சஞ்சையை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி ‘ராகிங்’ செய்துள்ளனர். அவர்கள் நான்கு பேரையும், கல்லூரி நிர்வாகம் 15 நாள் சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த நான்கு பேரும், சஞ்சையை மிரட்டி, நிர்வாணப்படுத்தி, பிளேடால் உடலெங்கும் காயப்படுத்தினர். இதுகுறித்து சஞ்சய் சூலூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ‘ராகிங்’ செய்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ‘ராகிங்’ பிரச்னையை மறைத்ததாக, விடுதி வார்டன் அனில்குமார், கல்லூரி மேலாளர் மற்றும் முதல்வர் ஆகியோரையும் போலீசார் இவ்வழக்கில் சேர்த்துள்ளனர்.
