வகுப்பில் மொபைல் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை
வகுப்பில் மொபைல் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை
UPDATED : நவ 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: திடீர் சோதனைகளை நடத்தி, வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தும் மாணவர்களைக் கண்டுபிடித்து, சஸ்பெண்ட் செய்ய சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக மன்னர் ஜவகர் பொறுப்பேற்றவுடன், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்தினார். பல்கலைக் கழக வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, ‘வகுப்பறையில் மொபைல் போனை சுவிட்-ஆப் செய்து விட வேண்டும்’ என மாற்றினார்.
மொபைல் போன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வகுப்பறையில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதுவரை 30 மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தொகையை குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சில மாணவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 1,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வகுப்பு நேரத்தில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதால், பாடங்கள் பாதிக்கப்படுவதாக பேராசிரியர்கள் கருதுகின்றனர். இதனால், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
விதிமுறைகளை மீறி பல மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குள் எஸ்.எம்.எஸ்., அனுப்பிக் கொள்வதாக நிறைய புகார்கள் வந்துள்ளன.
மொபைல் போன் பயன்படுத்தும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தால், அத்தொகையை மாணவனின் பெற்றோர் தான் கட்ட வேண்டியுள்ளது. இனிமேல் மாணவர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், சில தினங்களுக்கு வகுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ளோம்.
திடீரென வகுப்பறைக்குச் சென்று அனைத்து மாணவர்களிடமிருந்து மொபைல் போன்களை சேகரிக்க இருக்கிறோம். மேலும், இன்கமிங், அவுட் கோயிங் அழைப்புகளை சரி பார்த்து, வகுப்பு நடைபெறும் நேரத்தில் பேசியிருந்தாலோ, எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவனை வகுப்பிலிருந்து சில தினங்கள் சஸ்பெண்ட் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
