கொட்டும் மழையிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்
கொட்டும் மழையிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதம்
UPDATED : நவ 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகத்தில் நீண்டகாலமாக இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் இருந்து வந்தது. மாநில வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஒருவர் தொடர்ந்த வழக்கில், மாவட்ட சீனியாரிட்டி முறையை மாற்றி மாநில அளவில் நியமிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
மதுரை ஐகோர்ட்டின் உத்தரவையே பின்பற்ற வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உறுதி செய்தது. இதை எதிர்த்து, இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து பெண்கள் உட்பட 5,000 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழையிலும் உண்ணாவிரதம் நடந்தது.
தொடக்க கல்வித்துறை இயக்குனர் தேவராஜனிடம் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, நவ., 10ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உண்ணாவிரதம் இரவு 9 மணிக்கு பிறகும் தொடர்ந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸ் உயரதிகாரிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் குறித்து, இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,‘சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் அளித்துள்ள பதில் மனுவை திரும்ப பெற வேண்டும். இதில் முதல்வர் தலையிட்டு எப்போதும்போல் மாவட்ட பதிவு மூப்பு முறை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
