ஆசிரியர் நியமனத்தில் மாநில அளவில் ‘சீனியாரிட்டி’: ஐகோர்ட்
ஆசிரியர் நியமனத்தில் மாநில அளவில் ‘சீனியாரிட்டி’: ஐகோர்ட்
UPDATED : நவ 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கலாம் என, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வேலையற்ற உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் ராமசாமி தாக்கல் செய்த மனு:
மாவட்ட வாரியான சீனியாரிட்டி அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 94ம் ஆண்டு பதிவு செய்தவர்கள் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கோவை மாவட்டத்தில் 2003ம் ஆண்டு பதிவு செய்தவர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியான சீனியாரிட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை மீறுவதாகும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதன் மூலம் எங்கள் சங்க உறுப்பினர்கள் பலருக்கு வேலை கிடைக்கவில்லை. மாநில அளவிலான சீனியாரிட்டிபடி தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் வக்கீல் கிரிதர், ‘ஒரு வழக்கில், மாநில அளவிலான சீனியாரிட்டிபடி நியமனம் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஓவிய ஆசிரியர்கள் நியமனத்திலும் மாநில அளவிலான சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது’ என்றார்.
இதை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார், ‘ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு நியமித்துக் கொள்ளலாம்’ என உத்தரவிட்டார்.
