UPDATED : ஆக 15, 2013 12:00 AM
ADDED : ஆக 15, 2013 09:09 AM
பாரதியார் பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஆண்டுதோறும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், தேர்வாகும் மாணவர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த பின்னர் பணியில் சேர கால அவகாசம் வழங்கப்படுகிறது.
வேலைக்கு திண்டாட்டமாக காணப்படும் இக்காலகட்டத்தில், வளாக தேர்வு மூலம் பணிநியமனம் பெற்ற பெரும்பாலான மாணவர்கள் பணியில் சேர தயக்கம் காட்டுவது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிச., மாதம் தனியார் நிறுவனம் சார்பில் பாரதியார் பல்கலை மற்றும் அதன் கீழுள்ள கல்லூரிகளில் வளாக தேர்வு நடந்தது. ஈரோடு, கோபி, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை, குன்னூர் ஆகிய பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில், 1,165 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால், இதுவரை 400 மாணவர்கள் (35 சதவீதம்) மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். இதற்கு பெற்றோர்களே காரணம் என கல்லூரிகளிலுள்ள பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், எதிர்காலத்தில் கல்லூரி வளாக தேர்வுகள் நடத்தும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு குறையும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, பாரதியார் பல்கலை வேலை வழிகாட்டித் துறை இயக்குனர் ஜெயக்குமார் கூறியதாவது: மாணவர்கள் பணியில்சேர தயக்கம் காட்டுவதால், தனியார் நிறுவனங்கள் கோவைவருவதற்கு தயக்கம் காட்டலாம். வேலைவாய்ப்பு கடிதம் பெற்றாலும் பெரும்பாலான மாணவிகள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு செல்ல தயங்குகின்றனர்.
இளம் வயதிலேயே முதுநிலைப் பட்டமும் பெறட்டும் என, பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். நடுத்தர மற்றும் உயர்நிலை வசதியுடைய பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் பட்டப்படிப்புடன் வேலைக்கு செல்வதை உயர்வாக எண்ணுவதில்லை.
மாணவர்களும் வாழ்வின் முக்கிய முடிவுகளை சுயமாக எடுக்க தயங்குகின்றனர். தேர்வு முடிவுகள் வந்தவுடன் பணியில்சேர அழைப்பு அனுப்பப்பட்டது. இருப்பினும் 70 சதவீத மாணவர்கள் பணியில்சேரவில்லை. நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் உழைப்பு வீணானதே மிச்சம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறுகையில், "தகவல் தொழில்நுட்ப பின்னேற்பு நிறுவனங்கள் தங்களிடம் சேரும் பணியாளர்களுக்கு முதுநிலை பயில அனுமதி வழங்குகின்றனர்; செலவையும் ஏற்கின்றனர்.
பாரதியார் பல்கலை அஞ்சல் கல்வித் துறை, தனியார் நிறுவனங்களில் பணியில் சேரும் மாணவர்களுக்கு அஞ்சல் வழிக்கல்வி அளிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது. தகவல் தொழில்நுட்ப அலுவலக வளாகத்திலேயே அஞ்சல்வழி வகுப்புகளும் தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
பட்டம் பெறும் மாணவர்களுக்கு பல்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், பணிகளுக்கு வேண்டிய துறையறிவு மற்றும் திறன்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்லூரி அளவிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலர்கள் போட்டி தேர்வு பயிற்சியுடன் சந்தை நிலவரத்தை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
இதற்கு, முழுநேர வேலைவாய்ப்பு அலுவலர்களை நியமனம் செய்ய பல்கலையும், மாநில அரசும் வலியுறுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
