"மருத்துவ பாடத்தில் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும்"
"மருத்துவ பாடத்தில் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும்"
UPDATED : ஆக 21, 2013 12:00 AM
ADDED : ஆக 21, 2013 10:14 AM
சென்னை: "மாணவர்கள் அறியும் வகையில், மருத்துவ பாடத்தில் திருக்குறளின், மருந்து என்ற அதிகாரத்தை, பாடமாக வைக்க வேண்டும்" என்று, தமிழ் வளர்ச்சி துறையின் முன்னாள் இயக்குனர், சிலம்பொலி செல்லப்பனார் பேசினார்.
டாக்டர். வ.செ.நடராசன் எழுதிய, "முதுமையே வா...வா...வா..." என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை மியூசிக் அகடமியில் நேற்று நடந்தது. நூலின் முதல் பிரதியை, சிலம்பொலி செல்லப்பனார் வெளியிட, தமிழறிஞர் அவ்வை நடராசன் பெற்றுக் கொண்டார்.
இதில், சிலம்பொலி செல்லப்பனார் பேசியதாவது: வாழ்விற்கு தேவையானதாக உள்ள தூய்மையான குடிநீர், மாசற்ற காற்று, சத்தான உணவு உள்ளிட்ட, 10 கட்டளைகள் நூலில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. திருக்குறளில், மருந்து என்ற அதிகாரம் உள்ளது. இதில், மருத்துவம் குறித்த பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த செய்தி, பலருக்கும் தெரியவில்லை.
எனவே, மாணவர்கள் அறியும் வகையில், மருத்துவ பாடத்தில் திருக்குறளின், மருந்து என்ற அதிகாரத்தை, பாடமாக வைக்க வேண்டும். உரிய காலத்தில், அறிய வேண்டிய செய்திகளை அறியாமல் இருப்பதால் தான், நோய்கள் வருகின்றன. மன வலிமையும், தொண்டு உணர்வும் இருந்தால், நோயை விரட்ட முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
அவ்வை நடராசன் பேசும்போது, "முதுமை என்றால், அறிவுடைமை, கனிவு என்று பொருள். ஆஸ்திரேலியாவில், முதியோர் எந்த பொருள் வாங்கினாலும், பாதி கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. அங்கு முதியோர் மதிக்கப்படுகின்றனர். வாழ்வில் இயல்பாக வருவது தான் முதுமை. ஆக, முதுமைக்கு வேண்டியது மருந்தல்ல; விருந்து மட்டுமே" என்றார்.
