தொண்டு நிறுவன விடுதியில் அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள்
தொண்டு நிறுவன விடுதியில் அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள்
UPDATED : ஆக 31, 2013 12:00 AM
ADDED : ஆக 31, 2013 08:43 AM
நாமக்கல்: தொண்டு நிறுவன விடுதியில், காலை உணவு உட்கொண்ட, மாணவ, மாணவியர், 18 பேர், அடுத்தடுத்து மயங்கி விழுந்து, வாந்தி எடுத்தனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில், அரசு உதவி பெறும், எஸ்.பி.எம்., உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொரசப்பாளையத்தில், "வேர்டு" தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, படித்து வருகின்றனர். அவ்விடுதியில், 50 மாணவர், 24 மாணவியர் தங்கியுள்ளனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு, விடுதியில் உள்ள மாணவர்களுக்கு, இட்லி, குருமா வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட மாணவர்கள், பள்ளி சென்றனர். பள்ளி வந்த மாணவர்கள், அடுத்தடுத்து, திடீரென வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பலருக்கு தலைவலியும், தலைச் சுற்றலும் ஏற்பட்டது. அவர்களும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம், 18 மாணவ, மாணவியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
"மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட வார்டன், அமைப்பாளர் சாப்பிட்ட பின் வழங்க வேண்டும்" என அரசு உத்தரவிட்டது. ஆனால், விடுதி வார்டன் பின்பற்றவில்லை. அதன் காரணமாகவே, மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
