கடல்சார் பல்கலையில் பணிபுரிய அனுமதித்த உத்தரவுக்கு தடை
கடல்சார் பல்கலையில் பணிபுரிய அனுமதித்த உத்தரவுக்கு தடை
UPDATED : செப் 01, 2013 12:00 AM
ADDED : செப் 01, 2013 08:35 AM
சென்னை: சென்னையில் உள்ள, கடல்சார் பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியராக பணிபுரிய, பெண்ணுக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல், சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர், வாணிஸ்ரீ. இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலையில் (இக்னோ), உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். சென்னையில் உள்ள, கடல்சார் பல்கலையில், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார்; தேர்வு பெற்றார். "இக்னோ" பணியை, ராஜினாமா செய்துவிட்டு, கடல்சார் பல்கலையில் சேர வந்தார். அப்போது, பணியில் சேர, பல்கலை தரப்பில் அனுமதிக்கவில்லை.
நியமன உத்தரவும், ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வாணிஸ்ரீ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், பணியில் சேர, வாணிஸ்ரீயை அனுமதிக்க வேண்டும் என்றும், உதவிப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், கடல்சார் பல்கலையின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர்.
மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" விசாரித்தது. கடல்சார் பல்கலை சார்பில், மூத்த வழக்கறிஞர் விடுதலை, "தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு, வாணிஸ்ரீயை பணியில் சேர்ப்பது போலாகும். எங்கள் தரப்பை கேட்கவில்லை. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
மனுவை விசாரித்த, "முதல் பெஞ்ச்" கடந்த, ஜூலை, 23ம் தேதி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்தது. இம்மாதம், 10ம் தேதி வரை, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
