காஞ்சிபுரத்தில் நகராட்சி பள்ளி கட்டடம் இடிந்துவிழுந்த அவலம்
காஞ்சிபுரத்தில் நகராட்சி பள்ளி கட்டடம் இடிந்துவிழுந்த அவலம்
UPDATED : டிச 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வந்த கட்டடம் மழையில் இடிந்து விழுந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் உயிர் தப்பினர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள புதுப்பாளையம் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளிக் கட்டடத்தில் இரண்டு சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களை கவனிக்க இரண்டு ஆசிரியர்கள், இரண்டு சத்துணவுப் பணியாளர்கள் உள்ளனர். இந்தப் பள்ளியும் இக்கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையிலிருந்தது. கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன் பள்ளி கட்டட சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்கள் வகுப்பில் இல்லாததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
மேலும், சுவர் இடியாமலிருக்க மரங்களை முட்டுக் கொடுத்துள்ளனர். மழை குறைந்துவிட்டதால் மாவட்டம் முழுவதும் டிச. 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுப்பாளையம் நகராட்சிப் பள்ளிக்கும் மாணவர்கள் வந்தனர். வகுப்பறையில் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. எனவே, ஆசிரியர்கள், மாணவர்களை திறந்தவெளியில் அமர வைத்து பாடங்களை நடத்தினர்.
பள்ளிக் கட்டடம் சேதமடைந்த நிலையிலிருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்காக ஒக்கபிறந்தான் குளம் அருகே, தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் மண் நிரப்பி புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்திற்கு பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, பள்ளியை இடமாற்றம் செய்வதில் காலதாமதமாகிறது.
மேலும், புதிய கட்டடம் குளம் அருகே கட்டப்பட்டுள்ளதால், தற்போது மழையில் சுவர் ஈரப்பதம் நிறைந்து காணப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டடப் பணிகளை விரைவாக முடித்து, பள்ளியை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சிப் பொறியாளர் கனகராஜ் கூறும்போது, புதிய கட்டடப் பணிகளை விரைவாக முடித்து பள்ளியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
