காந்திகிராம பல்கலை துணைவேந்தர் சர்ச்சையால் நிர்வாகம் ஸ்தம்பிப்பு
காந்திகிராம பல்கலை துணைவேந்தர் சர்ச்சையால் நிர்வாகம் ஸ்தம்பிப்பு
UPDATED : செப் 19, 2013 12:00 AM
ADDED : செப் 19, 2013 09:17 AM
காந்திகிராமம்:காந்திகிராம பல்கலை துணைவேந்தர் சர்ச்சையால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளது. இங்கு துணைவேந்தராக இருந்த ராமசாமி, செப்.,9 , விடுவிக்கப் பட்டதால், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறைத் தலைவர் ஜோசப் துரைராஜ் (பொறுப்பு) துணை வேந்தராக, அறிவிக்கப்பட்டார்.
இதற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. வேளாண்மை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறைத்தலைவர் செந்திவேல், செப்.,13 ல் தானாக, பொறுப்பு துணைவேந்தராக அறிவித்து கொண்டார். ஆனால், இதை பதிவாளர் நாராயணசாமி ஏற்கவில்லை. இதனால், நிதி, நிர்வாகம், கல்வி தொடர்பான எந்த கோப்பையும், பொறுப்பு துணை வேந்தருக்கு அனுப்புவதில்லை. கடிதம் தொடர்பான பணிகளை மட்டும் செந்திவேல் கவனிக்கிறார்.
அனைத்து கோப்புகளும் பதிவாளர் அலுவலகத்தில் தேங்கியுள்ளதால், நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. செந்திவேல் கூறுகையில், "வேந்தருக்கும், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கும், துணைவேந்தராக பதவியேற்றது குறித்து தகவல் அனுப்பியுள்ளேன்" என்றார்.
பதிவாளர் நாராயணசாமி கூறுகையில், "மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக உத்தரவுக்கு, பிறகே, பொறுப்பு துணைவேந்தரை நியமிக்க முடியும். செந்திவேல் தானாக, பொறுப்பேற்றதால், அவருக்கு கோப்புகளை அனுப்பவில்லை" என்றார்.
