கல்விப்பணியில் "தினமலர்" ஈடில்லா வழிகாட்டி: ஆசிரியர்கள் பெருமிதம்
கல்விப்பணியில் "தினமலர்" ஈடில்லா வழிகாட்டி: ஆசிரியர்கள் பெருமிதம்
UPDATED : செப் 23, 2013 12:00 AM
ADDED : செப் 23, 2013 10:07 AM
சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் "தினமலர்" நல்லாசான் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சென்னை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் விருது பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கட்டுரைப் போட்டியில் சென்னை உட்பட பிறமாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 25 கட்டுரையாளர்கள், தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் சென்னை இந்து மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் மதியழகன் வரவேற்று பேசுகையில், "முதன்முதலில் பள்ளி மாணவர்களுக்கு "மாதிரி" வினாத்தாள்களை அறிமுகப்படுத்தியது "தினமலர்" தான். அதன் பின் தான் மற்ற பத்திரிகைகள் செயல்படுத்தின. சமீபகாலமாக ஆசிரியர்களையும் "தினமலர்" ஊக்குவித்து வருகிறது," என்றார்.
ஜெமிமா, ஆசிரியை, புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூந்தமல்லி: "தினமலரின்" நல்லாசான் விருது என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனது இந்த நிலைக்கு காரணம் என் பெற்றோர் தான். "தினமலர்" விருதை எனது மாணவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
வைரக்கண்ணு, அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி, மவுலிவாக்கம்: பிரமிப்பு மிக்க இந்த பிரபஞ்சத்தின் முதல் தூதுவன் ஆசிரியன். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் அடித்தளமான கல்விப் பணி செய்வதற்காக படைக்கப்பட்டவன் ஆசிரியன். பொறுப்போடும், லட்சியத்தோடும் பணியாற்றுவதே ஆசிரியரின் கடமை. மாணவர்களை மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களையும் கவுரவிக்கும் "தினமலரின்" கல்விப் பணிக்கு நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புஷ்பலதா, ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை: ஆசிரியர் என்றால், ஆசு -குற்றம்; இரியர்- அதை களைபவர். குற்றங்களை நீக்குபவரே ஆசிரியர். மாணவ, மாணவியரின் குற்றங்களை மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள குற்றங்களையும் சுட்டிக்காட்டி, நீக்க வேண்டும்.
முருகேசன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, தோட்டிலோவன்பட்டி, விருதுநகர்: குரு வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை என்பதே, அன்றைய குருகுல கல்வியின் அடிப்படையாகும். கிராமங்களில் பணி செய்து நல்ல மாணவ, மாணவியரை உருவாக்குவதே நல்லாசிரியரின் ஈடில்லா சேவை.
புருஷோத்தமன், முதல்வர், எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர்: இன்று சமுதாயம் சந்திக்கும் முக்கிய சவால் வன்முறைதான். ஆசிரியர்கள், வகுப்பில் பாடத்தை துவங்கும் முன், மாணவர்களுடன் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்தும் கலந்துரையாடலை நடத்த வேண்டும். அதன் மூலம் வன்முறையை தடுக்கலாம், தவிர்க்கலாம்.
மேலக்கோட்டையூர், கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை அகல்யா, கவிதையால் "தினமலருக்கு" புகழாரம் சூட்டி உற்சாகப்படுத்தினார்.
ராஜேந்திரன், சென்னை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி: விருது பெற்ற ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பது, இந்த விழா மூலம் தெரிகிறது. கட்டுரையில் சாதனைகள் மட்டுமல்ல, கல்விக்கான எதிர்கால சிந்தனைகளையும் ஆசிரியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள், மற்ற ஆசிரியர்களுக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்கள் மூலம் தான் நல்லொழுக்கங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அவர்களும் அதை பின்பற்றுவார்கள்.
