மின் சிக்கனத்திற்கு வழிகாட்டும் பொள்ளாச்சி மகளிர் பள்ளி
மின் சிக்கனத்திற்கு வழிகாட்டும் பொள்ளாச்சி மகளிர் பள்ளி
UPDATED : செப் 25, 2013 12:00 AM
ADDED : செப் 25, 2013 08:39 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து, மின் சிக்கனத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நகராட்சி அலுவலகம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான கட்டடங்களில், மின் சிக்கனத்தை ஏற்படுத்தும் வகையில்,சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஆலோசனை செய்தனர். நகராட்சிக் கூட்டத்திலும் மின் தட்டுப்பாடு பிரச்னை தீர்க்கவும்; மின்சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையிலும் "சோலார் பேனல்" அமைக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், நகராட்சி அலுவலகம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; நகராட்சி அலுவலக வளாகத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மின் தேவைகள் அனைத்தும் சோலார் மூலமே பயன்படுத்தப்பட்டு, முன்மாதிரி பள்ளியாக மாறி வருகிறது.
கோட்டூர் ரோட்டில் செயல்படும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2,500 மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் பள்ளி அலுவலக பணி உட்பட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்பட்டது.
இந்நிலையில்,நகராட்சி கல்வி நிதியின் கீழ் இப்பள்ளியில் 9 லட்சம் ரூபாய் செலவில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. 25 பேனல் கொண்ட 6 கே.வி.ஏ.,சோலார் பேனல் மற்றும் இன்வெர்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்திலும் வெளிச்சத்திற்காக "சோலார்" விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக, இப்பள்ளி மின்சாரத்தை, சோலார் பேனல் மூலம் அலுவலக கட்டடத்தில் உள்ள மின்சாதன பொருட்கள் இயக்கப்படுகின்றன.
"சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது தற்போது மிகவும் பயனுள்ளதாக மாறி வருகிறது; மின்கட்டணமும் குறைந்துள்ளது" என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நகராட்சி அலுவலகத்திலும் 6 கே.வி.ஏ., சோலார் பேனல் மற்றும் தேவையான உபகரணங்கள் 9 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகராட்சி அலுவலக கட்டடத்தின் ஒரு பகுதியான நகராட்சித்தலைவர், கமிஷனர், மேலாளர் அலுவலகம் அடங்கிய கடட்டத்தில் மட்டும் சோலார் பேனல் மூலம் மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1,500 யூனிட் மின்சாரம் மிச்சமாவதுடன், மின்கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.
நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்ட சோலார் பேனல் முழு பயன் அளிப்பதாக உள்ளது. காலை நேரங்களில் சூரிய ஒளியில் பேட்டரி சார்ஜ் ஆகி மாலை அலுவல் பணி முடியும் வரை பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று பள்ளியிலும் நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது. மழைக்காலங்களில், தானாகவே மின்சாரத்திற்கு மாறிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மின் சிக்கனம் மற்றும் மின் கட்டணம் குறைவதால் நகராட்சி அலுவலகம் முழுவதும்; பஸ் ஸ்டாண்ட், நகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
