UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 09:03 AM
சென்னை: கடல்சார் துறையை மேம்படுத்துவது; கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது மற்றும் கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி, உலக கடல்சார் நிறுவனத்தால் செப்.,26ம் தேதி, உலக கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "நிலையான வளர்ச்சி" என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.
கடல்சார் குற்றங்களை தடுத்து நிறுத்துவது; பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச நாடுகளை ஒருங்கிணைப்பதே இதன் முக்கிய நோக்கம். கடல் வழி கொள்ளைகள், கடத்தல்கள் சர்வதேச சமூகத்துக்கு சவாலாக விளங்குகின்றன. இதனால் பொருள் மற்றும் உயிர் இழப்புகளை உலக நாடுகள் சந்திக்கின்றன. உலகின் பொருளாதார வளர்ச்சியில், கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் எரிசக்தி, எக்கு, உணவுப் பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள் உள்ளிட்ட பல சரக்கு போக்குவரத்து, கப்பல் மூலமே நடக்கிறது.
கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பது, உலக நாடுகள் முன் உள்ள சவாலாக இருக்கிறது.கப்பல் போக்குவரத்தால் வியாபாரம் நடந்தாலும், அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும். கடல் வளத்தை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம் என உலக கடல்சார் நிறுவனம் வலியுறுத்துகிறது.
