UPDATED : டிச 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணை விட அரை சதவீதம் குறைவாக எடுத்த பெண்ணை, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியில் நியமிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுர்கத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு:
வடக்கானந்தலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாக தற்காலிகமாக பணியில் சேர்ந்தேன். அரசு பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய, கடந்த அக்டோபரில் அரசு சிறப்புத் தேர்வு நடத்தியது. நானும் தேர்வு எழுதினேன். 52 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வுப் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
கட் - ஆப் மதிப்பெண் 52.5 என்பதை 52 ஆக நிர்ணயித்திருந்தால் என்னைப் போன்று 28 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றிருப்பர். இரண்டு மதிப்பெண்கள் அளித்திருந்தால் தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பேன். சதவீத கணக்குப்படி 34.67 பெற்றுள்ளேன். எனவே, அதை 35 சதவீதமாக கணக்கில் கொண்டு என்னை பணியில் நியமிக்க வேண்டும். ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க இடைக்கால உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
