துபாயில் வேலையிழப்பு அதிகரிப்பு: மார்க்கெட்டிங் துறையும் பாதிப்பு
துபாயில் வேலையிழப்பு அதிகரிப்பு: மார்க்கெட்டிங் துறையும் பாதிப்பு
UPDATED : டிச 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
துபாய்: சமீப நாட்களில் துபாயில் இந்தியர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
இதுதொடர்பாக, ‘கல்ப் டைம்ஸ்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
வளைகுடா நாடுகளில் குறிப்பாக செழிப்பான நாடான துபாயில் வேலை பெறுவது என்பது இதுவரை எளிதான ஒன்றாக இருந்தது. இனி அப்படி இருக்காது. பொருளாதார மந்தநிலைமையால், பல நிறுவனங்கள் புதிதாக ஆட்களைச் சேர்ப்பதற்கு பதிலாக, ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். வரக்கூடிய மாதங்களில் இதேபோல் ஏராளமானவர்கள் குறிப்பாக 5,000 பேர் வரை வேலை இழக்கலாம் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் வேலை பார்த்தவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மற்ற துறைகளில் வேலை பார்ப்போருக்கு ஓரளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய அரபு குடியரசில் உள்ள மிகப்பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனமான, ‘டேமாக் புராபர்டீஸ்’ கடந்த மாதம் 200 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் மேலும் பலர் நீக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
