குறைகிறது ஐ.டி., மோகம்: இன்ஜினியரிங் மாணவர்கள் மனமாற்றம்
குறைகிறது ஐ.டி., மோகம்: இன்ஜினியரிங் மாணவர்கள் மனமாற்றம்
UPDATED : ஜன 16, 2009 12:00 AM
ADDED : ஜன 16, 2009 10:40 AM
ஐதராபாத்தில் செயல்பட்ட சத்யம் நிறுவனத்தின் மோசடி, நாட்டின் பல பகுதிகளில் உள்ளவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பொறியியல் பணியாளர்கள் புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பணிகளை ஒதுக்கி விட்டு, பிற துறைப் பணிகளை ஏற்பது என்றும் தீர்மானித்துள்ளனர். குறிப்பாக கடந்த நிதியாண்டில் பொறியியல் படிப்பை முடித்து, வேலை தேடிக் கொண்டிருக்கும் பலர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
‘சத்யம் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக கடந்த ஆண்டு பணியில் சேர்ந்தேன். ஆனால், அந்நிறுவனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை அறிந்த பின், அங்கு தொடர்ந்து வேலை பார்க்கும் என் முடிவை மாற்றிக் கொண்டேன். இதர நிறுவனங்களில் தகுந்த வேலையைப் பெறுவது என முடிவு செய்துள்ளேன்’ என்கிறார் பொறியியல் மாணவரான திவ்யதீப் கோயல்.
சண்டிகாரைச் சேர்ந்த மற்றொரு பொறியியல் மாணவரான சுமந்த் கூறுகையில், ‘சத்யம் நிறுவன மோசடி, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் துறையில் பணியில் சேர இப்போது எனக்கு விருப்பம் இல்லை. இதர துறை வேலையில் சேரவே விரும்புகிறேன்’ என்றார்.
இதே போல, ஏராளமான பொறியியல் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை பணியைப் புறக்கணித்து விட்டு, உற்பத்தித் துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
‘உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியமான துறையில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புகிறேன். அந்தத் துறைகளில் எனக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டால், தகவல் தொழில்நுட்பத் துறை பணியில் சேருவேன்’ என்றும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
