UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 10:09 AM
மும்பை: ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவரின் இரட்டை மகன்கள் 267 மற்றும் 1,816வது இடங்களைப் பிடித்து சாதித்து உள்ளனர்.
நாடு முழுவதும் 16 ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அத்துடன் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இந்திய சுரங்க கல்லூரி ஒன்றும் இயங்கி வருகிறது.
தரவரிசைப் பட்டியல்
இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர ஜே.இ.இ. என்ற நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சமீபத்தில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில், 27,151 பேர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சித்ராங் முர்டியா என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த நுழைவுத் தேர்வில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ரமா சங்கரின் இரட்டை மகன்களான ராம் மற்றும் ஷியாம், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான பிரிவில் 267 மற்றும் 1,816வது இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாதம், 8,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ரமாசங்கருக்கு நான்கு மகன்கள். எப்படியோ கஷ்டப்பட்டு தன் இரட்டை மகன்களை இதுவரை படிக்க வைத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ராம் மற்றும் ஷியாமும் இலவச பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்து படித்து நுழைவுத் தேர்வில் சாதித்துள்ளனர். ஐ.ஐ.டி.களில் பொறியியல் படிப்பை தொடர விரும்பும் இருவரும் இயற்பியல் மற்றும் வானியல் ஆராய்ச்சியாளர்களாக விரும்புகின்றனர்.
லட்சியம்
தற்போது, இருவரின் உயர் கல்விச் செலவையும் எப்படி சமாளிப்பது, எப்படியெல்லாம் உதவித் தொகை பெறுவது என்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரமாசங்கர். "என்னுடைய பெற்றோருக்கு, நானும் என் சகோதரனும் ஏதோ ஒரு தேர்வில் பாஸ் செய்து விட்டோம் என்று மட்டுமே தெரியும். இந்தத் தேர்வின் முக்கியத்துவம் பற்றி தெரியாது. ஆனால், எனக்கும் என் சகோதரனுக்கும், எங்கள் வாழ்வில் லட்சியங்களை அடைய இது முதல் படிக்கட்டாகும்" என்றார் ராம்.
