UPDATED : ஜூலை 01, 2014 12:00 AM
ADDED : ஜூலை 01, 2014 02:27 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் மாணவர்கள் போராட்டத்தால் பள்ளி வெறிச்சோடி காணப்பட்டது.
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி 2010-11ல் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 1 முதல் 5 ம் வகுப்பு வரை 170 மாணவர்களும் 6 முதல் 10 ம் வகுப்பு வரை 205 மாணவர்களும் பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாததால் 6 முதல் 10 ம் வகுப்பு வரை ஒரே கட்டடத்தில் செயல்படுகிறது.
கூடுதல் வகுப்பறை கட்ட இடம் ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் நேற்று பள்ளியை புறக்கணித்ததால் வகுப்பறைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வகணேஷ் தலைமையில் மாணவர்கள், பெற்றோர் இதுகுறித்து கலெக்டரிடம் முறையிட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது காரில் அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் வெங்கடாசலம் மாணவர்களை பார்த்ததும் இறங்கி வந்தார். மாணவர்களை உடனடியாக வகுப்பிற்கு அழைத்து செல்ல கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின் அங்கு வந்த பாலபாரதி எம்.எல்.ஏ. தலைமையில் மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். "எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் அளித்தால் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.20 லட்சம் பெற்று, கூடுதல் வகுப்பறை கட்டி கொடுக்கலாம்" என கலெக்டர் தெரிவித்தார். "வகுப்பறை கட்ட நிதி ஒதுக்கப்படும்" என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி தாடிக்கொம்பு போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: மாணவர்களை அனுமதியின்றி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். மாணவர்களை திரும்ப அழைத்தும், பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டார் என்றார்.
