ராகிங்கை தடுக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்க கோரிக்கை
ராகிங்கை தடுக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM
ADDED : ஜூலை 04, 2014 11:41 AM
புதுச்சேரி: கல்லுாரிகளில் ராகிங்கை தடுக்க, தலைமைச் செயலர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, இயக்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கரன், முதல்வரிடம் அளித்துள்ள மனு விபரம்: புதுச்சேரியில் மருத்துவக் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, கலைக் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், செவிலியர் கல்லுாரி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
வழக்கம்போல், இந்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு தயாராகி வருகின்றன. இவற்றில், முதலாமாண்டு சேர்க்கைக்கு வருகின்ற மாணவ மாணவிகளின் அச்சத்தை போக்கவும், படபடப்பை நீக்கவும், கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியமாக, கல்லுாரிகளில் நடக்கும் ராகிங்கை, முற்றிலும் தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கென, தலைமைச் செயலர் தலைமையில், கல்வித்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், டி.ஜி.பி., மற்றும் அனைத்து கல்லுாரி முதல்வர்கள், நிர்வாக அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, ராகிங்கை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
முதலாமாண்டு துவங்குவதற்கு முன்பாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான உத்தரவுகளை அந்தந்த கல்லுாரிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது, பறக்கும்படை ஒன்றை அமைத்து, அனைத்து கல்லுாரிகளிலும் ராகிங் நடக்காதவாறு, தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து கல்லுாரிகளும், முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியதில் இருந்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, இதுதொடர்பான தொடர் அறிக்கையை, அரசுக்கு தந்து கொண்டிருக்க அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு ராகிங் மற்றும் பிற இடர்பாடுகள் இருப்பின், அதை நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில், புகார் பெட்டி ஒன்றை அனைத்து கல்லுாரியும் அமைத்து தர வேண்டும். புகார் பெட்டியின் இருப்பிடத்தையும், அதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பும், குழு நடவடிக்கையின் செயல்பாடுகளை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அரசு தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் அச்சமின்றி, கல்லுாரி வாழ்வினை துவக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
