கல்விக் கட்டணம் வசூலிக்காதீர்: கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு
கல்விக் கட்டணம் வசூலிக்காதீர்: கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு
UPDATED : ஜூலை 23, 2014 12:00 AM
ADDED : ஜூலை 23, 2014 12:37 PM
சென்னை: "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம், கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சட்டசபையில் நடந்த விவாதம்:
டில்லிபாபு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி கற்கும்போது அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த பணம் வர கால தாமதமாகிறது எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கட்டாய கட்டண வசூல் நடந்துள்ளது.
அமைச்சர் சுப்ரமணியன்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். கடந்த ஆட்சியில் இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் 819 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மூன்றாண்டு கால ஆட்சியில் 1,636 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் 2010 - 11ல் பொறியியல் கல்லூரியில் படித்த இப்பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை 17,689. கடந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்கள் 71,259.
அமைச்சர் பழனியப்பன்: தனியார் கல்லூரிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரவு நகல், அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
