தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏரியா மாறியதால் படிப்பை இழந்து நிற்கும் மாணவர்கள்

ஏரியா மாறியதால் படிப்பை இழந்து நிற்கும் மாணவர்கள்

ஏரியா மாறியதால் படிப்பை இழந்து நிற்கும் மாணவர்கள்


UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM

ADDED : ஜூலை 30, 2014 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM ADDED : ஜூலை 30, 2014 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்ணகி நகர்: சென்னை பாரிமுனையில் இருந்து, துரைப்பாக்கம் எழில் நகருக்கு, இடம் மாற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, முத்துசாமி சாலை, நாராயணப்பா சாலை, பிரேசர் சாலை, மாலை அங்காடி சாலை ஆகியவற்றில், சாலையோர குடிசைகளில் வசித்து வந்த, 260 குடும்பத்தினர், கடந்த ஜூன், 22ம் தேதி இடம் மாற்றப்பட்டு, துரைப்பாக்கம், எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.

முடக்கம்: அவர்களுடன் சேர்த்து, இதுவரை, 430 குடும்பங்கள் எழில் நகரில் குடியமர்த்தப்பட்டு உள்ளன. அவற்றை சேர்ந்த குழந்தைகள், பல்வேறு பள்ளிகளில் படித்து வந்தனர்.தற்போது இடம் மாற்றப்பட்டதால், அந்த குழந்தைகள், படிப்பை பாதியில் விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பள்ளிக்கு செல்லாமல், எழில் நகரில், பல மாணவர்கள் சுற்றி திரிகின்றனர். மாணவியர் பலர் படிப்பை தொடராமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

என்ன காரணம்?

இதுகுறித்து, ஒரு மாணவியின் தந்தை சந்திரன் என்பவர் கூறுகையில், "என், மகள், முன்பு படித்த பள்ளிக்கு சென்றால், வீடு திரும்ப இரவாகி விடுகிறது. இதனால், அவள் பள்ளிக்கு செல்லவில்லை. எழில் நகரில் உள்ள பள்ளியில் படிக்க வைக்க விருப்பம் இல்லை. மேலும், இங்கிருந்து, சென்னை நகரில் உள்ள பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதியும் இல்லை" என்றார்.

மற்றொரு மாணவரின் தந்தை அண்ணாதுரை என்பவர் கூறுகையில், "நாங்கள் எல்லாருமே தினக்கூலிகள். அன்றாட வேலை செய்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும். ஒய்.எம்.சி.ஏ., பாய்ஸ் டவுன் (பாரிமுனை) பள்ளியில் படித்த என் மகனால், தற்போது அங்கு போய் வர முடியவில்லை. இதனால், படிப்பை நிறுத்திவிட்டான்" என்றார்.

மற்றொரு மாணவியின் தாய் கலைவாணி கூறுகையில், "பாரிமுனையில் உள்ள பள்ளியில் மாற்று சான்றிதழை வழங்க மறுக்கின்றனர். அதனால் வேறு பள்ளியில் சேர்க்க முடியவில்லை" என்றார்.

ஆலோசனை: இதுகுறித்து, குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை கண்ணகி நகர் ஆரம்ப பள்ளிகளில், 40 பேர், மேல்நிலைப் பள்ளியில் 12 பேர் என, 52 பேரை சேர்த்துள்ளோம். இடம்மாற்றப்பட்ட மாணவ, மாணவியரை கணக்கெடுக்கும் பணி சமூக வளர்ச்சி துறை மூலம் நடந்து வருகிறது. புதிய துவக்க பள்ளி, எழில் நகரில் தயார் நிலையில் உள்ளது. அதில் 300 மாணவர்களை சேர்க்க முடியும்" என்றார்

மாநகராட்சி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "படிக்க விரும்பும் மாணவர்களை கட்டாயம் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளோம். பேருந்து வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us