முதன்முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாட்குறிப்பு
முதன்முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாட்குறிப்பு
UPDATED : ஆக 18, 2014 12:00 AM
ADDED : ஆக 18, 2014 12:02 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நாட்குறிப்பு (மாணவர் கையேடு) வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, சிற்றுண்டி, சைக்கிள் உள்ளிட்ட பல இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், பொதுத் தேர்வு முடிவில் தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது.
தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும் நாட்குறிப்பு (டைரி) வழங்கி, அதில் மாணவர்களின் படிப்பு பற்றிய விபரங்கள் பெற்றோர் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக, ஹோம் ஒர்க், தேர்வு தொடர்பான விவரங்கள், தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றது என பல்வேறு விபரங்களை நாட்குறிப்பில் எழுதி, பெற்றோர்களுக்கு தினந்தோறும் தெரியப்படுத்தப்படுகிறது.
இதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பற்றிய விபரங்களை பெற்றோர் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தனியார் பள்ளிகளில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வரும் நாட்குறிப்பு வழங்கும் முறையை, அரசுப் பள்ளிகளில் அமல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதன்முறையாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 150 மாணவர்களுக்கு, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நாட்குறிப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து படிப்படியாக, தில்லையாடி வள்ளியம்மை பள்ளி, சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியம் பள்ளி உள்ளிட்ட ஐந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்கப்பட உள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நேரத்தில், தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் வகையிலும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், நாட்குறிப்பு (மாணவர் கையேடு) வழங்கும் திட்டம், பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
