திருமண மண்டபம், சாவடியில் தஞ்சமடையும் பள்ளி மாணவர்கள்
திருமண மண்டபம், சாவடியில் தஞ்சமடையும் பள்ளி மாணவர்கள்
UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 11:10 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வாலாந்தூர் அருகே நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டட மேற்கூரை சேதமடைந்துள்ளன. மாணவர்கள் படிக்க திருமண மண்டபம், சாப்பிட சாவடி தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது.
இப்பள்ளியில் 120 மாணவர்கள் படிக்கின்றனர். 1960, 1970, 1980 ல் பள்ளிக்கு நான்கு கட்டடங்கள் கட்டப்பட்டன. சில ஆண்டுகளாக ஓடு வேயப்பட்ட மரங்கள் சிதைந்ததால் ஓடுகள் விழத் துவங்கின. சமீபத்திய மழையினால் ஓடுகள் அதிகம் விழுந்து விட்டன.
கிராமத்தினர் புகாரையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கட்டட மேற்கூரை ஓடுகளை பிரித்து கீழே அடுக்கி வைத்தனர். ஒரே நேரத்தில் நான்கு கட்டடங்களின் மேற்கூரை சேதமானதால் ஒரே ஒரு வகுப்பறையில் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். ஊர் கல்யாண மண்டபத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பயிலுகின்றனர். மதிய உணவு கிராம சாவடியில் தற்காலிகமாக வழங்கப்படுகிறது.
ஊராட்சித் தலைவர் பாண்டியம்மாள் கூறியதாவது: மழையின் போது தண்ணீர் வகுப்பறைக்குள் புகுந்தது. மேற்கூரை சேதமடைந்துள்ளது. தற்காலிகமாக கல்யாண மண்டபம், சாவடி பயன்படுத்தப்படுகிறது. வகுப்பறை கட்டடங்களை விரைவில் சரி செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டுள்ளோம்" என்றார்.

