வால்பாறை வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்கு வழங்கியது என்ன?
வால்பாறை வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்கு வழங்கியது என்ன?
UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 11:17 AM
வால்பாறை: வால்பாறையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், கோவை நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய குறிப்புகள்:
அமிர்தம், தமிழ்: தேர்வறைக்கு, தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்னரே செல்ல வேண்டும். தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில் என அனைத்தும் எடுத்துச் செல்ல வேண்டும். வினா எண்கள் விடுபடாமல் எழுத வேண்டும். கையெழுத்து தெளிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும். பயம், பதட்டமில்லாமல் எழுதணும்.திருக்குறள், தொடர் நிலை செய்யுள், மறுமலர்ச்சி பாடல் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும், திருக்குறள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். வினாக்களுக்கு மேற்கோள் காட்டி எழுதணும்.
தமிழ் இரண்டாம் தாளில், உரைநடைபாடம் 1,2,5,6,8 பாடங்களை தவறாக படித்தால், 90 சதவீதம் மதிப்பெண் பெறலாம். துணைப்பாடம் நன்றாக படித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம். பாடங்களை நன்றாக மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.
ஜெபக்குமார், ஆங்கிலம்: புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களை நன்றாக பயிற்சி செய்தால், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முடியும். கட்டுரை வினாக்கள், 1,2,3,6 பாடங்களிலிருந்து கேட்கலாம். விடையளிக்கும்போது, முக்கிய பாயின்டுகளை கருப்பு மையால் கோடிட்டு காட்டலாம். பொதுக்கட்டுரைகள், அறிவியல், சமூகம் சம்பந்தப்பட்டதாக கேட்கப்படும். அடித்தல், திருத்தல் இன்றி எழுதினால், ஆங்கிலத்தில் முழு மதிப்பெண் பெற முடியும்.
சகாதேவன், கணிதம்: கடந்த 2006ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களிலிருந்து தான் அதிகமாக வினாக்கள் கேட்கப்படுகின்றன. பழைய வினாத்தாளை வைத்து பயிற்சி பெறலாம். ப்ளூ ப்ரிண்ட் வைத்து படிக்கலாம். ஒரு வினாவிற்கு விடை தெரியாவிட்டால், அதில் நேரத்தை செலவிடாமல், தெரிந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டும். தினசரி பயிற்சி செய்தால், முழு மதிப்பெண் பெறலாம். முதல் யூனிட்டை நன்றாக படித்தால், 22 மதிப்பெண் பெறலாம்.
இரண்டாவது யூனிட்டில், பத்து மதிப்பெண் வினாக்கள் இரண்டு கேட்கலாம். மூன்றாவது யூனிட்டில், ஆறு மதிப்பெண் வினாக்கள் அதிகமாக கேட்கப்படும். ஆறாவது யூனிட் பயிற்சி பெற்றால், 16 மதிப்பெண் பெறலாம். கடைசி 15 நிமிடங்கள் விடைத்தாள் சரிபார்க்க வேண்டும்.
ஹேப்பிகணேஷ், இயற்பியல்: இயற்பியல் பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்; தினசரி பயிற்சி அவசியம். பத்து மதிப்பெண் வினாக்கள் 1, 4,6, 8 ஆகிய யூனிட்டுகளிலிருந்தும்; 2,7 யூனிட்டிலிருந்து நான்கு ஐந்து மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். 1,4,6 ஆகிய யூனிட்டை படித்தால், மூன்று ஐந்து மதிப்பெண்கள் வினாக்களுக்கு விடையளிக்கலாம். படங்கள் வரைந்து எழுதும் வினாக்களில், ஐந்து மதிப்பெண் வினாக்களில், படங்களுக்கு ஒரு மதிப்பெண்ணும்; 10 மதிப்பெண் வினாக்களில், படங்களுக்கு மூன்று மதிப்பெண்ணும் வழங்கப்படும். புத்தகத்தை நன்றாக படித்தால், 18 ஒரு மதிப்பெண் வினாவிற்கு எளிதாக விடையளிக்கலாம். தினசரி பயிற்சியிருந்தால் இயற்பியலில் முழு மதிப்பெண் பெறலாம்.
ரகுவரன், வேதியியல்: மொத்தம் 22 பாடங்கள் உள்ளன; அதில், 15 பாடங்கள் படித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம். தினமலர் ப்ளூப்ரிண்ட் மாடலாக வைத்து படிக்கலாம். ஐந்து மார்க் தவறாமல் படிக்கணும்; புரிந்து படித்து திரும்ப திரும்ப படிக்க வேண்டும். வேதியியல் பாடத்தில், 11,12,15,16,22 பாடங்களை நன்றாக படித்தால், 145 மதிப்பெண் பெறலாம்.
சித்ரா தேவி, தாவரவியல்: தாவரவியல் 1,3,5 பாடங்கள் படித்தால், 62 மதிப்பெண் பெறலாம். விலங்கியலில், 2,3,5 பாடங்கள் படித்தால், 60 மதிப்பெண் பெறலாம்; புத்தகத்தில் ஒரு பக்கம் விடாமல் படித்தால், அனைத்து ஒரு மதிப்பெண்ணிற்கு விடையளிக்கலாம். நேர மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்கும் நேரத்தை பிரித்துக்கொண்டு விடையளிக்க வேண்டும். படம் வரைந்தால், பாகம் குறிக்க வேண்டும். படித்ததை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரவீதா, கம்ப்யூட்டர் சயின்ஸ்: கடந்த சில ஆண்டுகளாக பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். டெபினேஷன் தெளிவாக எழுத வேண்டும். கீ வேர்டு, கீ போர்டு சரியாக குறிக்க வேண்டும். முக்கியமான பாயிண்டுகளை கோடிட்டு காட்ட வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்கள் ஓஎம்ஆர் ஷீட்டில் கேட்கப்படும். அவை அடித்தல், திருத்தல் இன்றி எழுத வேண்டும். தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பயிற்சி இருந்தால், முழு மதிப்பெண் பெறலாம்.
சங்கீதா, பொருளியல்: பொருளியல் பாடத்தினை புரிந்து படிக்க வேண்டும். நேரத்தை பிரித்து விடையளிக்க வேண்டும். தேர்வை கண்டு அச்சம் கொள்ளாமல், வினாக்களை நன்றாக படித்து விடையளிக்க வேண்டும். பொருளியல் பாடத்தில், கிராப் போன்ற வினாக்களுக்கு முறையாக விடையளித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம். ஆசிரியர் கூறும் குறிப்புகளை நன்றாக படித்து, சந்தேகமிருந்தால், கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். பொருளியல் பாடங்கள் முழுவதும் படிக்க வேண்டும்.
துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலாமணி: வணிகவியல்:முதல் பாடத்தில், 35 மதிப்பெண்களுக்கு கேள்வி இடம் பெறும். நிறுமம், கூட்டுறவு பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து படிக்க வேண்டும். தினமும் எழுதிப்பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகள் 40க்கு விடையளிக்க வேண்டும். 20 மதிப்பெண் வினாக்கள் படித்தாலே ஈஸியாக நான்கு மதிப்பெண், 12 மதிப்பெண் வினாக்களுக்கு பதில் அளிக்கலாம்.
கணக்குப்பதிவியல்: நன்கு கேள்விகளை புரிந்து படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகள் 30 அனைத்திற்கும் விடையளிக்க வேண்டும். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு கண்டிப்பாக தியரிக்கு எ.கா., தர வேண்டும். 12 மதிப்பெண் வினாக்கள் முழுமை பெறா இரட்டைப்பதிவு முறையில் கணக்குகள் கண்டிப்பாக வரும். 20 மதிப்பெண் வினாவில், இறுதிக்கணக்கு கேட்கப்படும். கணக்குகள் போடும்போது எடுத்து எழுதுவதில், பிழை இருக்கக்கூடாது. பின்னம் மாறி எழுதக்கூடாது; கூட்டுவதில் பிழை ஏற்படும்.
ஒவ்வொரு கணக்குகளிலும் தேய்மானம், வாராகடன் போன்றவை வரும்போது குறிப்பு 1,2 என போட்டு தனியாக கண்டுபிடித்து கணக்குகளில் எழுதும் போது தெளிவாக எழுத வேண்டும். தேய்மானம் கணக்கு, கூட்டாண்மை, சேர்ப்பு, விலகல் போன்றவைகளில் தேதிகளை, ஆண்டுகளை கண்டிப்பாக ஒரு முறைக்கு இருமுறை படித்து எழுத வேண்டும். சூத்திரம் மற்றும் குறிப்பேட்டு பதிவுகள் கட்டாயம் எந்நேரத்தில் கேட்டாலும் சொல்ல தெரிந்திருக்க வேண்டும். கணக்குப்பதிவியல் பாடம் எளிமையானது; எளிதில், 200 மதிப்பெண்கள் பெறலாம்.

