நாட்டின் பிரபல பல்கலையில் இப்படியும் ஒரு விதிமுறை!
நாட்டின் பிரபல பல்கலையில் இப்படியும் ஒரு விதிமுறை!
UPDATED : நவ 12, 2014 12:00 AM
ADDED : நவ 12, 2014 01:44 PM
நூலகத்திற்கு மாணவியர் சென்றால், மாணவர்களுக்கும், மாணவியருக்கும் காதல் ஏற்பட்டு விடும்; அதைத் தடுக்கவே அனுமதி மறுக்கப்படுகிறது என, துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட நூலகம்
உத்தர பிரதேசத்தில் பிரபலமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன், பிரமாண்ட நூலகம் உள்ளது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, நூலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்; மாணவியர் அனுமதிக்கப்படுவதில்லை. 1,300 மாணவர்கள் அமர்ந்து படிக்க அங்கு இடவசதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 மாணவியருக்கு மட்டுமே தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. தங்களையும் நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என, மாணவியர் தப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டும், பல்கலைக்கழக நிர்வாகம் கேட்பதாக இல்லை. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது.
பல்கலைக்கழக துணைவேந்தர், லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "மாணவர்களுக்கே இடப்பற்றாக்குறை நிலவும்போது, மாணவியரை அங்கே அனுமதித்தால் வேண்டத்தகாத பிரச்னைகள் ஏற்படும். இருதரப்பினரும் பருவ வயதினர்; அவர்களை அருகருகே அமரச் செய்தால், காதல், கீதல் போன்ற விவகாரங்கள் ஏற்படும் என்பதால், பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார்.
கட்டுப்பாடு இல்லை
மாணவியர் தரப்பில் கூறப்படும்போது, "எங்களை அங்கு அமர்ந்து படிக்க அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் கேட்கும் புத்தகங்களை எடுத்து கொடுக்கவாவது அனுமதிக்க வேண்டும்; இதையும், பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது" என்றனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் பலமாக விவாதிக்கப்பட்டதை அடுத்து, நான் அவ்வாறு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; மாணவர்களுடன் மாணவியர் அமர்ந்தால், காதல் ஏற்பட்டுவிடும் என கூறவில்லை என, துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா மறுத்துள்ளார்.
அலிகார் பல்கலை தோற்றம்: 1875
மாணவர்கள்: 30,000
ஆசிரியர்கள்: 2,000
பரப்பளவு:1,155 ஏக்கர்
நாட்டின் பிரபலமான பல்கலைகளில், முதல் சில இடங்களில் உள்ளது.

