UPDATED : நவ 27, 2014 12:00 AM
ADDED : நவ 27, 2014 12:53 PM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சேதம் அடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியம் நடுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம் சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. சிறு மழை பெய்தாலும் மழைநீர் வகுப்பறையில் தேங்கிவிடுகிறது.
இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை இல்லை. எஸ்.எஸ்.ஏ.,திட்டம் மூலம் பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு முதல் கட்டமாக 5.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல மாதம் ஆகிறது. ஆனால் பணி துவங்கவில்லை.
தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் கூறியதாவது: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி கிராம கல்விக்குழு மற்றும் தலைமை ஆசிரியர் பொறுப்பில் கட்டுமானப்பணி மேற்கொள்ள கல்வித்துறை நிர்ப்பந்தம் செய்து வருகிறது. கட்டுமானப் பணிக்கு முன்பு கொட்டேஷன், கட்டமானப் பொருட்களுக்கான தரச்சான்று பெறுதல், வங்கி பணிகள் உட்பட பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டி உள்ளது.
இதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிப்படைகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகளின் பதில் கிடைத்ததும் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும், என்றார்.
