பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்
UPDATED : டிச 19, 2014 12:00 AM
ADDED : டிச 19, 2014 10:38 AM
உடுமலை: இலவச லேப்-டாப் மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அரசு கலைக்கல்லூரி இளநிலை பிரிவில், ஆதிதிராவிட மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டுக்குள் அம்மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என இளநிலை பிரிவு மாணவ, மாணவியர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக சென்ற பஸ்களை மறித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த, உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள், கல்வி உதவித்தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், "மாணவர்களின் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும்; கழிப்பறை வசதியை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும்" என்றனர்.
உடுமலை கிளை போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "கல்லூரி வழித்தடத்தில் இரண்டு பஸ்கள் இயக்க மட்டுமே அனுமதி உள்ளது; கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். அதன்பின், மாணவ, மாணவியர் கலைந்து சென்றனர்.
