ஹோலிக்கு விடுமுறை அளிக்காத பள்ளிகளுக்கு பாகிஸ்தான் ‘நோட்டீஸ்’
ஹோலிக்கு விடுமுறை அளிக்காத பள்ளிகளுக்கு பாகிஸ்தான் ‘நோட்டீஸ்’
UPDATED : மார் 26, 2016 12:00 AM
ADDED : மார் 26, 2016 11:01 AM
கராச்சி: பாகிஸ்தான், சிந்து மாகாணத்தில் முதன்முறையாக இந்து பண்டிகையான ஹேலிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல பள்ளிகள் விடுமுறை விட்டிருந்தாலும் சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. அவ்வாறு ஹோலி அன்று செயல்பட்ட பள்ளிகளுக்கு அரசு சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிந்து மாகாண அரசின் இந்த விடுமுறை அறிவிப்பு, மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக பலர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பும் இருந்தது. இந்துக்களுக்கு மட்டும் விடுமுறை அளித்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களுடைய புனித நாட்களின்போது விடுமுறை அறிவிக்கப்படுகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். (இந்தியாவில் முஸ்லிம்களின் புனித நாட்களுக்கு பொது விடுமுறை விடப்படுவது பாகிஸ்தானியர்களுக்கு தெரியாது போலும்)
இந்த பொது விடுமுறை அறிவிப்புக்கு தனியார் பள்ளி நிர்வாகங்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இன்று ஹோலிக்கு பொது விடுமுறை அறிவிக்கும் அரசு நாளை ராமாயணம் படிக்க வேண்டும் என்றும் கூறுமா என்று கேட்டனர். இருப்பினும் பல பள்ளிகளில் மாணவர்கள் ஹோலி பண்டிகை குறித்த விவரங்களை கேட்டதாகவும் அது எப்போது பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று கேட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்ததாக சங்கத் தலைவர் தெரிவித்தார்.
கராச்சியில் பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததாக தெரிவித்த முதல்வரின் செய்தி தொடர்பாளர் ரஷீத் சனா, அரசின் அறிவிப்பை மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் எனறார்.
