UPDATED : ஜூன் 26, 2009 12:00 AM
ADDED : ஜூன் 26, 2009 04:10 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜு மகள் சுவீத்தா. எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். யோகா ஆசிரியர் திருநாவுக்கரசிடம் யோகா கற்று வருகிறார்.
மக்களிடம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆணிகள் பதிக்கப்பட்ட பலகை, கண்ணாடிப் பலகை, முட்டைகள் ஆகியவற்றின் மீது அமர்ந்து யோகாசனம் செய்து வந்தார். முட்டை மீது அமர்ந்து தொடர்ச்சியாக அனைத்து ஆசனங்களையும் செய்து சாதனை படைக்க திட்டமிட்டார். அதன்படி, லிம்கா சாதனைக்காக முட்டை மீது அமர்ந்து யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி, எஸ்.எஸ்.கே.வி., பள்ளி அரங்கில் நடந்தது.
எட்டு முட்டைப் பெட்டிகளில் 120 முட்டைகள் வீதம் இரண்டு வரிசையில் 240 முட்டைகள் வைக்கப்பட்டன. அவற்றின் மீது அமர்ந்த சுவீத்தா, 16 வகையான யோகாசனங்களை செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். எஸ்.எஸ்.கே.வி., பள்ளி செயலர் ராமன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயந்தபத்மநாபன், டாக்டர் பரந்தாமன் ஆகியோர் மாணவியை பாராட்டி பரிசளித்தனர். யோகராஜ் சத்யநாராயணன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
சாதனை குறித்து மாணவி சுவீத்தா கூறும்போது, ‘ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முட்டை மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்தேன். இப்பயிற்சியை கடந்த எட்டு வருடங்களாக செய்து வருகிறேன். தினமும் 10 முட்டைகள் உடையும். தினமும் பயிற்சி செய்ததால் தற்போது முட்டைகள் உடையாமல் ஆசனங்கள் செய்ய முடிகிறது’ என்றார்.