UPDATED : அக் 07, 2009 12:00 AM
ADDED : அக் 07, 2009 11:06 AM
இந்த விஷயத்தில், எப்படி செயல்படுவது என்று வங்கிகளுக்கு வரையறை எதுவும் தெரிவிக்கப்படாததால் வங்கி அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். ஏழை மாணவர்களும் உயர்க்கல்வி பெறும் வகையில், வங்கிகளில் கல்விக் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் உத்தரவுப்படி அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும். இதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நான்கு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க, வங்கிகள் எந்த ஆவணமோ, நிபந்தனையோ விதிக்கக் கூடாது. நான்கு லட்சம் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் பெற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் யாரிடமாவது ஜாமீன் பெற வேண்டும்.
ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற, மாணவர்கள் ஏதேனும் சொத்து ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச தொகையாக இருந்தால், மாணவரிடமும், பெற்றோரிடமும் உறுதி வாங்கிக் கொண்டு கடன் கொடுக்க வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள வழிமுறை. இந்நிலையில், ஏழை மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்று, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், இம்முறை எப்போது அமலுக்கு வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அதேபோல, மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ‘ஆண்டு வருவாய் 4.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், வட்டி இல்லா கல்விக்கடன் பெற தகுதியானவர்கள்’ என்று கூறியிருந்தார். இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், வங்கிகளுக்கு அலுவலக ரீதியாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடனுக்கு வட்டி வசூலிக்கப்படுமா என்பது உறுதிபடுத்தப்படவில்லை.
இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வட்டி இல்லாத கல்விக்கடன் குறித்து வங்கிகளுக்கு இதுவரை எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. இதனால், வழக்கம் போல கடன் தொகைக்கு வட்டி வசூலித்து வருகிறோம். வட்டி இல்லாத கல்விக்கடன் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தால், தற்போது வழங்கப்பட்ட கடன் தொகைக்கான வட்டி தொகை ரத்து செய்ய வாய்ப்புள்ளது’ என்றனர்.
ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட, வட்டியே இல்லாத கல்விக்கடன் திட்டம் (ஜீரோ பர்சன்ட் இன்ட்ரஸ்ட் லோன்) குறித்து, வங்கிகளில் கேட்கும் பெற்றோர்களுக்கு இதுவரை தெளிவில்லாத பதில் மட்டுமே கிடைக்கிறது. வட்டியில்லா கடன் கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, கல்விக் கடன் விஷயத்தில் மாணவர்களை வங்கிகள் எந்த வகையிலும் கிடுக்கிப்பிடி செய்யக்கூடாது என்று, மத்திய அரசு உத்தரவிட்டும் பல வங்கிகள் குறைந்தபட்ச தொகைக்கே பல ஆவணங்களை கேட்டு மாணவர்களை அலைக்கழிக்கிறது.
மேலும், கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க இரண்டு வழிமுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கடன் தொகை பெற்ற மாதத்தில் இருந்தே வட்டி செலுத்துவது ஒருமுறை. படிக்கின்ற காலத்தில் பெறும் கடன் தொகையுடன், வட்டித் தொகையையும் சேர்த்து 60 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை மாதாந்திர தவணையில் கடனை திரும்ப வசூலிக்கும் திட்டம் மற்றொரு முறை. இந்த இரண்டு முறையில், கடன் பெறுவோரின் விருப்பத்திற்கு ஏற்ப வங்கிகள் அதை திரும்ப வசூலிக்க வேண்டும்.
உடனுக்குடன் வட்டி செலுத்த வேண்டும்; ஆவணங்கள், ஜாமீன் தர வேண்டும் என்று வங்கிகள் மாணவர்களிடம் எந்த கிடுக்கிப்பிடியும் செய்யக்கூடாது. ஆனால், சில வங்கிகள் கடன் வழங்கியது முதல், மாதாந்திரம் வட்டி செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. இது கல்விக்கடன் விதிமுறைக்கு மாறான செயல்பாடாகும். அவ்வாறு செயல்படும் வங்கிகள் மீது அந்தந்த வங்கிகளின் தலைமை அலுவலகத்திலோ, ரிசர்வ் வங்கியிலோ புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் விழுக்காட்டை 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதை மையமாக கொண்டே கல்விக்கடன் விஷயத்தில் நிபந்தனைகளை தளர்த்தி, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடன் வழங்குவது மட்டுமல்லாமல், உ<ரிய முறையில் மாணவர்கள் பணிக்கு சென்றதும் திரும்ப வசூலிக்கும் பொறுப்பும் அந்தந்த வங்கிகளையே சார்ந்துள்ளது. இதனால் தான், கடனை வசூலிக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்றனர்.
