தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை மாணவர் படிக்க உதவும் ஜீவாலயா அறக்கட்டளை

ஏழை மாணவர் படிக்க உதவும் ஜீவாலயா அறக்கட்டளை

ஏழை மாணவர் படிக்க உதவும் ஜீவாலயா அறக்கட்டளை


UPDATED : அக் 19, 2009 12:00 AM

ADDED : அக் 21, 2009 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2009 12:00 AM ADDED : அக் 21, 2009 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த அறக்கட்டளையின் மூலம் இந்த ஆண்டு 350 மாணவ மாணவியர் படிக்க 30 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
திறமை இருந்தும் வறுமை காரணமாக ஏராளமானோர் படிப்பை தொடர முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இது போன்ற ஏழை மாணவ மாணவியருக்கு கோவை போலீஸ் கமிஷனர் சிவனாண்டி உதவி வருகிறார்.

இவரை அணுகும் ஏழை மாணவ, மாணவியர் படிக்க, வசதி படைத்தவர்களிடம் இருந்து பண உதவி பெற்று உதவுகிறார்.
இந்தாண்டு இவரிடம் உதவி பெற்ற ஏழை மாணவ மாணவியருக்கு மாநகர காவல் துறை சார்பில் நேற்று மதியம் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி பெற்ற கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

சிலர் மேடையேறி கமிஷனரின் முயற்சிகளுக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்தனர். இதன் பின் கமிஷனர் சிவனாண்டி பேசியதாவது இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் 37 கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். உணவு கிடைப்பதே சிரமம் என்ற நிலையில் உள்ள இவர்களால் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்? இவர்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காகவே கல்வி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

37 கோடியில் ஒரு சதவீதத்தினராவது படித்து முன்னேறி குடும்பத்தின் வறுமையை ஒழித்தால் அதுவே அவர்கள் கற்ற கல்விக்கு பெருமை. கல்வி மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். எட்டணா காசு இல்லாததால் பள்ளிச் சான்றிதழ் வாங்க முடியாமல் சிரமப்பட்ட நான், இன்று கமிஷனர் பதவியில் இருப்பதற்கு நான் படித்த படிப்புதான் காரணம். கல்வி செல்வம் இருந்தால் வேறு எந்த செல்வமும் தேவையில்லை. யாரைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.

இன்று உதவி செய்ய பலர் தயாராக உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கு படித்து உயர் பதவிகளை அடைய வேண்டும். அதன் பின் இதே போல் படிக்க முடியாமல் சிரமப்படுபவர்களை தத்து எடுத்து படிக்க வைக்க வேண்டும். கோவையில் இதுவரை 350 ஏழை மாணவ மாணவியர் உதவி பெற்றுள்ளனர். இவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை உதவித் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 35 ஆயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் மேம்படுத்தப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கே நேரடியாக உதவித் தொகை சென்றடைவதால் தவறாக பயன்படுத்தப்படாது. இந்த ஆண்டு உதவித் தொகை பெற்றவர்கள் அடுத்தாண்டும் கல்லூரி, விடுதி கட்டணங்கள் பெறலாம் பயப்படத் தேவையில்லை. அடுத்த ஆண்டுக்கான கட்டண விபரங்களை டிசம்பருக்குள் தெரிவித்தால், உதவுபவர்களை தயார் செய்ய முடியும். கல்வி உதவி பெற்றுத் தருவதற்கு, ஜீவாலயா எனும் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. உதவுவோர் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.


இவ்வாறு, கமிஷனர் சிவனாண்டி பேசினார். தொழிலதிபர் ராஜேந்திரன், துணை ஆணையர்கள் காமினி, நாகராஜ் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்திருந்த அனைவருக்கும் மதியம் சுடச்சுட அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

தினமலருக்கு நன்றி


தந்தையை இழந்த கம்பத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தும், பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் தவிப்பது பற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இவரது நிலையை அறிந்த கமிஷனர் சிவனாண்டி உட்பட பலர் தாராளமாக பண உதவி செய்தனர். தற்போது அம்மாணவி கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரது தாயார் உமா, ஆதரவற்ற நானும் மகளும் இன்று உயிரோடிருக்க தினமலர் நாளிதழும் கமிஷனர் சிவனாண்டியும்தான் காரணம். ஜென்ம ஜென்மத்துக்கும் இந்த நன்றியை மறக்க மாட்டேன், என குரல் தழுதழுக்க நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us