தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தகுதித் தேர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தகுதித் தேர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தகுதித் தேர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


UPDATED : ஆக 20, 2020 12:00 AM

ADDED : ஆக 20, 2020 06:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2020 12:00 AM ADDED : ஆக 20, 2020 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நிரப்புவதற்கு, அந்தந்த துறைகள் தனித்தனியாக தேர்வுகளை நடத்துகின்றன. ரயில்வே, பொதுத் துறை வங்கிகள் என, ஒவ்வோர் அமைப்புக்கும் தேர்வு முறைகள் உள்ளன. இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித் தனியாக, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்துக்கு பயணிக்க வேண்டும். வெவ்வேறு நேரங்களில் தேர்வு நடத்தப்படுவதால், தனித் தனியாக அதற்கு தயாராக வேண்டிஉள்ளது. இதனால், அரசு வேலை எதிர்பார்ப்போர், அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்னையும் உள்ளது.
இந்நிலையை மாற்றும் வகையில், &'மத்திய அரசுப் பணிகளுக்கு, தேசிய அளவில் ஒரே தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும்&' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, தேசிய அளவில் ஓர் அமைப்பை உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான, கெசட்டட் அதிகாரி அல்லாத பணிஇடங்களுக்கு, அதாவது, குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுதும், ஒரே மாதிரியான, ஒரே தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும், தேசிய பணியாளர் தேர்வு முகமை உருவாக்கப்படுகிறது. இந்த முகமை மூலம், முதல்கட்ட தகுதித் தேர்வு நடத்தப்படும். இது நாடு முழுதும் நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள், மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும். தங்களுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்புவோர், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பும் அளிக்கப்படும். இந்தத் தேர்வை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
இந்த முதல் தகுதித் தேர்வின் அடிப்படையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது அடிப்படை தகுதி தேர்வு தான். இதன் மூலம், சில துறைகள் நடத்தும் சிறப்பு தேர்வில் பங்கேற்கும் தகுதியை பெறலாம். ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், நிதி சேவைத் துறை, எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்தியப் பணியாளர் வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், புதிய முகமையின் பிரதிநிதிகளாக இருப்பர்.
தற்போது முதல்கட்டமாக, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம், மத்தியப் பணியாளர் வாரியம் ஆகியவை நடத்தும் தேர்வுகள், என்.ஆர்.ஏ.,யின் கீழ் நடத்தப்படும். இதைத் தவிர, பல்வேறு துறைகள் மூலம் நடத்தப்படும், 20க்கும் மேற்பட்ட தேர்வுகளும், இந்த புதிய முகமையின் கீழ், படிப்படியாக கொண்டு வரப்படும்.
தற்போது நாடு முழுதும், மூன்று கோடி பேர், இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்கள், இனி தனித் தனியாக தேர்வுகளை எழுத வேண்டியதில்லை. தேசிய பணியாளர் தேர்வு முகமை நடத்தும் தேர்வின் மூலமாகவே, இந்தத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.
முதல்கட்டமாக, 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். பின்னர் படிப்படியாக பல்வேறு மொழிகள் சேர்க்கப்படும். குறைந்தபட்சம், ஒரு மாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த தேசிய பணியாளர் தேர்வு முகமை, சுய அதிகாரம் உள்ள, தொழில்முறையிலான, சிறப்பு வேலைவாய்ப்பு அமைப்பாக இருக்கும். ஆன்லைன் மூலமாகவே திறனறி தேர்வுகள் நடத்தப்படும். அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வெளிப்படை தன்மை!

தேசிய பணியாளர் தேர்வு முகமை மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும். பல்வேறு தேர்வு முறைகள் ஒருங்கிணைக்கப்படுவதால், இளைஞர்களின் நேரம், பணம் மிச்சப்படுத்தப்படும். மேலும், இது, பணியாளர் தேர்வில், வெளிப்படை தன்மையையும் ஏற்படுத்தும்.- நரேந்திர மோடி, பிரதமர்
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள்:

* பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லையை ஒட்டியுள்ள லடாக்குக்கு, ராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகளை கொண்டு செல்வதற்கு வசதியாக, புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. மணாலியில் இருந்து லே பகுதி வரை, இந்த புதிய சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
* லக்னோ, ஆமதாபாத், ஜெயப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களை பராமரிப்பதற்கான உரிமத்தை, அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமானங்களில், மூன்றை பராமரிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
* &'டிஸ்காம்&' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்கள், தங்களுடைய செயல்பாட்டு மூலதனத்தை உயர்த்திக் கொள்வதற்கான விதிகளை தளர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், கடனில் தத்தளிக்கும் இந்த நிறுவனங்கள், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us