பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
UPDATED : செப் 05, 2020 12:00 AM
ADDED : செப் 05, 2020 09:07 AM
மதுரை:
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சியை சேர்ந்த அசோகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு:
தமிழகத்தில், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, ஜே.இ.இ., தேர்வு தாமதமாக துவங்கியுள்ளது, செப்., 13ல் நீட் தேர்வும் நடக்கவுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு முன், செப்., 17ல் தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பலர் தேசிய அளவிலான பொறியியல் கல்லுாரிகளுக்கு செல்வதால், தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் பெற்ற இடங்கள் காலியிடங்களாகும். அந்த காலியிடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்பது தொடர்பாக, அரசு அறிவிப்பு வெளியிட வில்லை. அதுவரை தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் விரும்பும் படிப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் போது, காலிப்பணியிடங்கள் ஏற்படுவது இயல்பு. இவற்றை அரசு எவ்வாறு கையாள்கிறது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரி மனுதாரர் அறிந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு அளிக்கிறது. இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
