தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல; கடவுளின் அழைப்பு

ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல; கடவுளின் அழைப்பு

ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல; கடவுளின் அழைப்பு


UPDATED : செப் 07, 2020 12:00 AM

ADDED : செப் 07, 2020 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2020 12:00 AM ADDED : செப் 07, 2020 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் பணி அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதை விட மாணவர்களின் வாழ்வை ஆதாரமாக்குதலான பணியாகவே இருக்க வேண்டும். தாயின் கருவறையைப் போன்றே வகுப்பறையும் புனிதமானது.
காரணம் களிமண்ணாய் இருக்கும் கலவையை சிலையாய் வடிக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் தாயிற்கு இணையாக ஆசிரியர்களை குறிப்பிடுகின்றனர். குழந்தைகளை பெற்றோர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்றால் அந்த குழந்தையைப் பட்டை தீட்டி வைரமாய் ஆக்கி இந்த உலகத்தையே அவனுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.
அன்னையின் அரவணைப்பு

சிவசுப்பிரமணிய ஐயர் என்ற ஆசிரியரின் மூலமே கலாமிற்குள் இருந்த விஞ்ஞானி வெளி வந்தார். கண் பார்வையற்ற, வாய் பேச இயலாத ஹெலன் கெல்லரை உலகமே பேசும் அளவிற்கு சாதனை படைக்க வைத்த ஆனி சல்லிவன் என்ற ஆசிரியர் விளையாட்டுப் பொருட்கள் மூலமாக ஹெலன் கெல்லருக்கு கற்பித்தல் முறையை எளிதாக்கி கற்பித்தவர்.
சல்லிவன் முதன்முதலாக ஹெலனைத் தொட்டதை, பின்னாளில் அவர் எழுதும்போது, &'அது அன்னையின் அரவணைப்புக்கு இணையானது&' எனக்குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆசிரியரால் எத்தகைய குழந்தையையும் சிறப்பாக்க முடியும் என்பதற்கான ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இவர்கள். பாடங்களை மட்டுமல்ல வாழ்வியலையும் கற்றுத் தருபவர்கள் ஆசிரியர்கள்.ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் நான்கு சுவர்கள் அடங்கிய வகுப்பறையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
எப்போது பள்ளி

டீச்சர்...எப்போ பள்ளி திறப்பீங்க என்ற பெற்றோரின் குரல்கள் இப்போதைய இந்த கொரோனா கால விடுமுறையின் காரணமாக ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருக்கிறது. இணைய வழியிலும், தொலைக்காட்சி வழியேயும் பரவலாக கற்றல் நடந்து கொண்டு இருந்தாலும் அது ஆசிரியரின் கற்பித்தலுக்கு மாற்றாக இல்லை. சாப்பிட்டியாடா கண்ணு என்று தலை வருடலோடு ஆரம்பிக்கும் வகுப்பறையில் உள்ள ஆசிரியரின் நெகிழ்வு தரும் அன்பை தொழில்நுட்பம் ஒரு போதும் தந்துவிட முடிவதில்லை.
காரணம் கொள்வோன் கொள்வகையறிந்து கொடுப்பதை அறிந்தவர்கள் ஆசிரியர்கள். அதனால் தான் இரண்டாவது பெற்றோர் என்று ஆசிரியரைக் குறிப்பிடுகின்றனர். தன் பிள்ளை மட்டும் நல்லாருக்கணும் என்றில்லாமல் தன்னிடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளுமே நல்லாருக்கணும் என்று நினைப்பது ஆசிரிய சமுதாயம் என்பதாலேயே, மாதா, பிதாவும் காட்டும் குருவே தெய்வத்தினை விட உயர்வானவர்கள் என்று தெய்வத்திற்கு முந்திய இடத்தை தந்திருக்கிறார்கள்.

ஏணிகள்

ஏற்றி விடும் ஏணிகளால் உயர்வு பெற்றவர்கள் ஏராளம். கடந்த கால நினைவுகளை அசை போடும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஆசிரியர் இருப்பார் என்பதை மறுக்கவே இயலாது. உயிரோட்டமான வகுப்பறைகள் பல தலைவர்களையும், மேதைகளையும், தொழிலதிபர்களையும் உருவாக்கி இருக்கிறது என்பதற்குப் பின்னால் அதற்குப் பின்னாலான ஆசிரியர்களின் பணி இங்கு போற்றுதலுக்குரியது. ஒரு குழந்தைக்கு வகுப்பறைகள் கொடுக்கும் நம்பிக்கையை போல வேறு எதுவும் தந்துவிட முடியாது.
ஒவ்வொரு குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அதில் அக்குழந்தையை சாதிக்க வைக்கும் சக்தி ஆசிரியர்களிடமே உண்டு. ஒழுங்கு மீறிய செயல்களை ஏதேனும் ஒரு குழந்தை செய்யும் போது பொது வெளியில் உங்க வாத்தியார் இதை தான் உனக்கு சொல்லித் தந்தாங்களா என்ற கேள்வி எழுவதுண்டு. இதன் அடிப்படை காரணம் ஒழுக்கம், பண்புகள், நாகரிகம் என்று அனைத்தையும் கற்றுத் தருவது ஆசிரியர்கள் தான் என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறது.
உளவியல் நிபுணர்கள்

எந்த எதிர்பார்ப்புகளுமின்றி, மாணவர்களை குழந்தையாக நேசிப்பவர்கள் ஆசிரியர்கள். வகுப்பறையில் ஆசிரியர்பணி இலகுவானதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். குருகுலக் கல்வியில் இருந்த கல்வி முறை மாறி கூகுள் கல்விமுறையாக மாறி விட்டது. இத்தகைய சூழலில் மாணவர்களை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். தொழில் நுட்பம் அறிந்துள்ள இன்றைய தலைமுறையின் மன நுட்பமும் அறியும் உளவியல் நிபுணர்களாகவும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
உளிபடாத கல் சிலையாவதில்லை. அதுபோலவே ஆசிரியர் களின் கண்டிப்பு இல்லாத குழந்தைகள் சரியான பாதையில் செல்ல முடிவதில்லை. இன்றைய சமூகம் ஆசிரியர்களின் கண்டிப்பை விரும்புவதில்லை. வீடுகளும், பள்ளிகளும் கண்டிக்காத குழந்தை சமூகத்தால் கண்டிக்கப்படுகிறது.
நான் ஆசிரியராக தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. பாடத்தைக் கவனிக்காமல் வகுப்பில் சக மாணவியுடன் பேசிக் கொண்டு இருந்த என்னை ஆசிரியர் காதைப் பிடித்து கிள்ளியதை வீட்டில் வந்து அழுத படியே,ஆறுதல் தேடி அம்மாவிடம் சொல்ல அம்மாவோ மேலும் இரண்டு அடி அடித்த போது திகைத்துப் போனேன். அப்போது என் அம்மா சொன்னது...&'டீச்சர் சொன்னதைக் கேட்காம வளர்ந்தா உருப்படவே முடியாது&' என்ற அந்த வார்த்தைகள் இன்றும் பசு மரத்தாணியாக மனதில் உள்ளது. இன்று நான் ஆசிரியராக வருவதற்கு காரணமும் என் ஆசிரியர்கள் தான் என்பதை பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.
ஆனால் இந்த விருட்சத்தை வளர்த்து விட்ட வேர்கள் எந்த வித புகழையும் ஏற்றுக் கொள்ளாமல் கைம்மாறு வேண்டாது, மழையை எல்லாருக்குமாய்ப் பெய்து கொண்டே இருக்கின்றன.ஆசிரியர்களான ஏணிகள் சில நேரங்களில் மிதிபடுவதில் வருத்தமில்லை. அந்த ஏணிகளில் ஏறி உயரே செல்லும் மாணவர்களைப் பார்த்து அவர்கள் பெருமை கொள்வதே சிறப்பு. தன்னை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப் படாமல் பெருமைப் படுபவர்கள் ஆசிரியர்களே.
போற்றுவோம்

மாணவனுக்கு அன்னை போன்று அரவணைப்பு, தந்தை போன்று கண்டிப்பு தந்து நல்லறிவு ஊட்டி சமூகத்தில் நல்ல ஒரு குடிமகனாக மிளிரச் செய்ய வேண்டிய பொறுப்பு ஆசியர்களுக்கு உண்டு. மெழுகாய் தன்னை உருக்கி மாணவர்களுக்கு ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியர்களைப் போற்றுவோம். இன்று வரலாறு படிப்பவனை நாளை வரலாறு படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவர்கள் ஆசிரியர்கள் என்பதை நினைவு கொள்வோம்.
ஆசிரியப் பணி பிழைப்பு அல்ல; கடவுளின் அழைப்பு என்பதை உணர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கங்கள்.
-ம.ஜெயமேரி, ஆசிரியை
ஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப் பட்டிbharathisanthiya10@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us