UPDATED : அக் 30, 2009 12:00 AM
ADDED : அக் 30, 2009 12:05 PM
இன்ஜினியரிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, ஆன்லைன் மூலம் நடத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக, அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வை(ஏ.ஐ.இ.இ.இ.,) ஆன்லைனில் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, அரசு, கடந்த வாரம் குழு ஒன்றை அமைத்தது. தேசிய தொழில்நுட்ப மைய கவுன்சிலால் அமைக்கப்பட்ட இந்த குழுவினர், அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வின், தற்போதைய முறை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுவில் அலகாபாத், கோழிக்கோடு மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப மையங்களின் இயக்குனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வுக்கான தகுதி குறித்தும் மறுஆய்வு செய்வர். மாணவர்கள் இன்ஜினியரிங் துறையில், எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, தேசிய தொழில்நுட்ப மையங்கள் பல சுற்று கவுன்சிலிங் நடத்திய பிறகும், பல கல்லூரிகளில் ஏராளமான இன்ஜினியரிங் சீட்கள் காலியாக உள்ளன. இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தலைமையிலான, தேசிய தொழில்நுட்ப மைய கவுன்சில், இரண்டாவது குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த குழு, தேசிய தொழில்நுட்ப மையத்தின் தற்போதை பாடத்திட்டத்தை மாற்றயமைப்பது குறித்து ஆய்வு செய்யும். இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "தற்போதைய தொழிற்சாலை தேவைகளுக்கு ஏற்ப, எதிர்கால இன்ஜினியர்களை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடைபெறுகிறது' என்றனர். மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில்சிபல், தேசிய தொழில்நுட்ப மையங்கள் அனைத்தும், தங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு தெரிவித்துள்ளார்.
