UPDATED : நவ 07, 2009 12:00 AM
ADDED : நவ 07, 2009 09:16 AM
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பொதுநூலகத்துறை சார்பில் அனைத்து மாவட்ட நூலகத்திலும் செப்டம்பர் 16 முதல் நமது உலகம் நூலகம் என்ற புதிய முறை அறிமுகமாகியுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரை அதிகப்படியாக நூலகத்தில் உறுப்பினராக சேர்ப்பதே இதன் நோக்கம். தமிழகத்திலேயே ஈரோடு மாவட்ட நூலகம்தான் பள்ளி மாணவ, மாணவியரை அதிகப்படியாக உறுப்பினராக சேர்த்துள்ளது.
சென்ற அக்டோபர் 1 முதல் 30ம் தேதி வரையில் அரசு பள்ளியை சேர்ந்த 40 ஆயிரம் மாணவ, மாணவியர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்தக்கோரி பொதுநூலக இயக்குநர் மூலம் மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திட்ட செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை ஒன்றும் மாவட்ட நூலக அலுவலரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நூலகங்களை தூய்மை செய்தல், நூலக வளாகத்தை அழகுபடுத்தி அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் செய்தல், நூலகத்தை சுற்றியுள்ள இடங்களில் பூஞ்செடிகள், மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முனைப்புத்திட்டம், புரவலர்களை அதிகமாகச் சேர்த்தல், நூலக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்த வாசகங்களை நூலகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் எழுதி வைத்தல்,
நூலகங்களில் வாசகர் வட்டம் செயல்பட முறையான வழிகாட்டுதல் தயாரித்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்தல், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாசகர் வட்டம் அமைத்து மாதம் ஒரு முறை நூல் விமர்சன நிகழ்வு மாணவர்களிடையே ஏற்படுத்தி வாசிப்பை நேசிக்க வைத்தல். நூலகத்துறையில் ஏற்கனவே காலாண்டு இதழ் இருந்தாலும், மாதாந்திர செய்தி மடல் ஒன்றை உருவாக்குதல், மாணவர்களுக்கு பொது நூலகங்களைச் சார்ந்து பல்வேறு போட்டிகள் நடத்துதல். வாசகர்கள் தாங்கள் வாசித்து நேசித்த நூல்களை நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்தல்.
புதிய நூல்களைப் பதிப்பாளர்கள் மக்களிடையே அறிமுகம் செய்ய பூங்காக்களில் புத்தகம் என்கிற புதிய முயற்சியை ஏற்படுத்துதல். பொதுமக்கள் பங்களிப்புடன் தமிழகத்திலுள்ள அனைத்து நூலகங்களையும் செம்மைப்படுத்துதல், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டுதல், சமூக அமைப்புகளுடன் நூலக இயக்கத்தை ஒருங்கிணைத்து மேன்மையாக்குதல், நூலகங்களில் ஒவ்வொறு வாரமும் நல்ல தமிழ் படிப்போம், எழுதுவோம் ஆகிய வகுப்புகள் நடத்துதல். இந்த செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ஒரு வாரமாக கணக்கிடப்பட்டு வரும் டிசம்பர் 29 வரை செயல்படுத்தப்படவுள்ளது.
