தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘நிரந்தர சுகம், செல்வம், கல்வி கற்போருக்கே கிடைக்கும்’

‘நிரந்தர சுகம், செல்வம், கல்வி கற்போருக்கே கிடைக்கும்’

‘நிரந்தர சுகம், செல்வம், கல்வி கற்போருக்கே கிடைக்கும்’


UPDATED : நவ 09, 2009 12:00 AM

ADDED : நவ 09, 2009 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2009 12:00 AM ADDED : நவ 09, 2009 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மாணவர்களுக்காக, ‘தினமலர்’ நாளிதழ் நடத்தும் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலை துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது:


தேசிய அளவில், பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக உள்ளது; தமிழகத்தில் 12 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 100 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினால், அதில் 12 பேர் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பள்ளிப்படிப்புடன், வாழ்க்கையை ஏன் மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.


வறுமை, படிப்பில் ஆர்வமில்லாதது, தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் தாழ்வு மனப்பான்மையுடன் விளங்குவதுதான் இதற்கு காரணம். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் மற்றும் நாட்டுக்கு, கல்வி மட்டுமே நன்மை சேர்க்கும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நிரந்தர சுகத்தையும், செல்வத்தையும் கல்வி கற்போரால் மட்டுமே சம்பாதிக்க முடியும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் கொடுக்க வேண்டிய முதல் செல்வம் கல்விச் செல்வம் தான். கல்வி கற்க முடியாத சூழல் களைந்தெறியப்பட வேண்டும்.


இன்றைய இளைய தலைமுறையின் விடிவெள்ளியாக விளங்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், வாழ்க்கையில் படாத கஷ்டங்களா? அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, வாழ்வில் முன்னேற வேண்டும். நான் படிக்கும் போது, எனக்கு இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டி மட்டுமே இருந்தது. கல்லூரியில் படிக்கும் பொழுது, பலமுறை கட்டணம் கட்டத் தவறியதால், கல்லூரியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டேன். எனது தாயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை, எனது கல்விக்காக மஞ்சள் கயிறாக மாற்றியமைக்கும் நிலை ஏற்பட்டது. இன்றோ எனது கல்வியின் மூலம், உங்கள் முன் துணை வேந்தராக நிற்கிறேன்.


நான் துணைவேந்தராக பதவியேற்ற பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 125 கல்லூரிகளில் குறைந்தது 10 மாணவர்களுக்கு, ஒவ்வொரு கல்லூரியிலும் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 82 துறைகளில், ஒவ்வொரு துறைக்கும், ஒரு மாணவருக்கு இலவச கல்வி பெற ஏற்பாடு செய்துள்ளேன். பொருளாதாரக் காரணத்தை காட்டி,  கல்வியை ஒதுக்காதீர்கள். வறுமையை ஒழிக்க கல்வியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை மனதில் வைத்து, கல்விபெற்று, வாழ்க்கையில் சாதனை படையுங்கள்.


அண்ணா பல்கலையில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி படித்தேன்; மனது வலித்தது. உயர்கல்வி என்பது எட்டாக்கனியில்லை என்பதை உணர வேண்டும். தற்போதுள்ள பாரம்பரிய படிப்புகளை, வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகளாக மாற்றியமைத்துள்ளோம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மனப்பாட அறிவையே வளர்க்கிறது; சிந்தனையை கொடுக்கவில்லை. நீங்கள் சிந்தனை அறிவை வளர்த்துக் கொண்டால், மட்டுமே கல்வியில் மேலோங்க முடியும்.


சென்னைப் பல்கலையில் பட்டம் மட்டுமின்றி, மாணவர்களுக்கு வேலையையும் கொடுத்து அனுப்புவோம். நீங்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்; எங்கள் பல்கலையில் வந்து பயில வேண்டும்; தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற வேண்டும். இவ்வாறு திருவாசகம் பேசினார். மேலும் அவர், ‘சமுதாய அக்கறை கொண்டு இயங்கும் நாளிதழ் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது’ எனக் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us