மாணவர்களை திசை திருப்பும் திரைப்படங்கள்: ரமேஷ் பிரபா
மாணவர்களை திசை திருப்பும் திரைப்படங்கள்: ரமேஷ் பிரபா
UPDATED : நவ 09, 2009 12:00 AM
ADDED : நவ 09, 2009 11:43 AM
சென்னை: “திரைப்படங்கள் மாணவர்களை குடும்பத்தினருக்கு எதிராக திசை திருப்பி விடுகின்றன,” என்று எழுத்தாளர் ரமேஷ்பிரபா பேசினார்.
சென்னையில் நேற்று நடந்த ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரமேஷ்பிரபா பேசியதாவது:
மாணவர்கள் பிளஸ் 2 முடித்ததும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேரவே ஆசைப்படுகின்றனர். இந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பில் உள்ள முக்கியத்துவத்தைப் போல மற்ற படிப்புகளிலும் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. பெரும்பாலான படிப்புகள், அதன் முக்கியத்துவம், அதற்குரிய வேலைவாய்ப்புகள் பற்றி தெரியாமலே உள்ளன.
பொதுவாக, வேலைவாய்ப்புகளில் பெரும் போட்டி இருக்கிறது. போட்டிகளை சமாளித்து வேலை பெற, பல துறை படிப்புகள் அவசியம். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் நடத்தும் படிப்புகள் குறித்து இங்குள்ள பலருக்கு தெரியாததாலும், கவனம் செலுத்தாததாலும் வடமாநிலங்களில் இருந்து வந்து 90 சதவீதம் பேர் படிக்கின்றனர். திரைப்படங்கள் இளைஞர்களை, குடும்பத்தினருக்கு எதிராக திசை திருப்பி விடுகின்றன.
படத்தில் காட்டப்படுவது போல நாமும் நடந்து கொள்ள வேண்டும் என்று, குடும்பத்தினரை முறைத்துக் கொண்டால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டியிருக்கும். திரைப்படங்களில் ஒருவரே பலரை அடித்துச் சாய்ப்பதை பார்த்து சிரிப்பது போல காதலையும் நினையுங்கள். படிக்கும் காலத்தில் காதல் தேவையில்லை. எதிலும் பகுத்தறிவு அவசியம். படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடிக்காதீர். தனிமையில் இருக்கும் போது தவறான எண்ணங்கள் எழலாம். கூடியவரை நல்ல நண்பர்களோடு சேருங்கள். மீதி நேரத்தை குடும்பத்தாரோடு செலவிடுங்கள். இவ்வாறு ரமேஷ் பிரபா கூறினார்.
