எஸ்.ஐ., பணிக்கு தேர்வானோர் தற்காலிகப் பட்டியலுக்கு தடை
எஸ்.ஐ., பணிக்கு தேர்வானோர் தற்காலிகப் பட்டியலுக்கு தடை
UPDATED : மே 20, 2021 12:00 AM
ADDED : மே 20, 2021 04:08 PM
மதுரை:
எஸ்.ஐ., பணிக்கு தேர்வானோர் தற்காலிகப் பட்டியலுக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த சோழபூபதிராஜா தாக்கல் செய்த மனு:
பி.இ., படித்துள்ளேன். 2017ல் இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்தேன்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் - டி.என்.யு.எஸ்.ஆர்.பி., 969 எஸ்.ஐ., பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு, 2019 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்தேன். ஆன்லைனில் தொழில்நுட்பக் கோளாறால் என்.எஸ்.எஸ்., சான்றை பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். அதில், 100க்கு, 74 மதிப்பெண்கள் பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது கல்விச் சான்று மற்றும் என்.எஸ்.எஸ்., சான்றை சமர்ப்பித்தேன்.என்.எஸ்.எஸ்., சான்றுக்கு, 0.50 சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என, தெரிவித்தனர். எஸ்.ஐ., பணிக்கு தேர்வானோர் தற்காலிகப் பட்டியல் ஏப்., 15ல் வெளியானது. அதில் என் பெயர் இல்லை.என்.எஸ்.எஸ்., சான்றுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கியிருந்தால் எஸ்.ஐ., பணி நியமனத்திற்கு தகுதி பெற்றிருப்பேன்.
எஸ்.ஐ., பணிக்கு தேர்வானோரின் தற்காலிக பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். சிறப்பு மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.
நீதிபதி டி.கிருஷ்ணகுமார், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
