தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொட்டும் மழையில் மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கொட்டும் மழையில் மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கொட்டும் மழையில் மாணவ, மாணவியர் பங்கேற்பு!


UPDATED : நவ 16, 2009 12:00 AM

ADDED : நவ 16, 2009 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2009 12:00 AM ADDED : நவ 16, 2009 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் எளிதில் வெற்றி பெறவும், மாணவர்கள்  இடையே தேர்வு பயத்தை நீக்கவும் தினமலர் சார்பில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

செங்கல்பட்டில் ஆறாவது ஆண்டாக நேற்று தினமலரின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி  சிறப்பாக நடந்தது. காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4 மணிக்கே மாணவ, மாணவியர் திருமண மண்டபத்திற்கு வர துவங்கினர்.

அதிகாலை செங்கல்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து செங்கல்பட்டு பஸ் நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலுமிருந்து மாணவ மாணவிகள் மகிழ்ச்சி பொங்க பட்டாம்பூச்சிகளாக இறங்கினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் வேகமாக தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்த கிருஷ்ணா மஹாலுக்கு விரைந்தனர்.

காலை 6 மணிக்கு மாணவ மாணவியர் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஐ.ஏ.எஸ், அதிகாரி இறையன்பு மாணவர்களுக்காக பிரத்யேகமாக எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் என்ற வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், புளூ பிரின்ட் புத்தகம், உடல் நலம் பாதுகாப்பு குறித்த புத்தகம், குறிப்பெடுக்க நோட்டு, பேனா ஆகியவை வழங்கப்பட்டன.

அனைத்தையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர் வரிசையாக அரங்கிற்குள் அமர வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில், இரண்டு அரங்கமும் நிறைந்தது.  அரங்கம் நிரம்பி வழிந்ததும் மாணவ, மாணவியர் ஏராளமானோர் இடமில்லாமல் அரங்கில் வழங்கப்பட்ட புத்தகங்களுடன் வெளியே நின்று குறிப்பெடுத்தனர்.

காலை 8 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான நிகழ்ச்சி துவங்கியது. அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ், ஆங்கில ஆசிரியர் ஆனந்தன், தமிழாசிரியர் மதியழகன், கணித ஆசிரியர் கேசவன் ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதை எளிய நடையில் விளக்கினர்.
தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி, 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி, 75 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி, 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி என தனித்தனியே விளக்கினர். ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரும் என்ற விவரத்தையும் தெரிவித்தனர். மாணவர்கள் ஆர்வமுடன் ஆசிரியர்கள் கூறியதை குறிப்பெடுத்தனர்.

கல்வியாளர்  ரமேஷ்பிரபா,  வங்கி அதிகாரி விஜய் கிருஷ்ணன் ஆகியோர் மாணவ மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கினர்.  பகல் 11 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது.

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலையிலே குவிந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்ளே சென்றதும் வரிசையில் நின்றனர். பகல் 11.30 மணிக்கு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இயற்பியல் ஆசிரியர் கோபிஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கணித ஆசிரியர் பத்மநாபன், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர் சேகர், கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் ரமேஷ், பொருளியல் ஆசிரியர் ரவி, வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், கணக்குப் பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன், வணிகக்கணிதம் ஆசிரியர் பத்மநாபன் ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி என மாணவர்களுக்கு விளக்கினர்.

மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர். மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது. செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட்வில்சன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கிராமப்புற மாணவர்கள் குவிந்தனர்: 
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் குடை பிடித்தபடி குவிந்தனர்.

செங்கல்பட்டு அடுத்த பி.வி.களத்தூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, செம்பாக்கம், திருப்போரூர், சூணாம்பேடு, சாலவாக்கம், ஒரக்காட்டுபேட்டை, புக்கத்துறை, மதுராந்தகம், அச்சிறுப் பாக்கம், செய்யூர், எல்.எண்டத்தூர், சிங்கபெருமாள் கோவில், ஆத்தூர், பாலூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பஸ், ஆட்டோ, வேன், இரு சக்கர வாகனங்கள் என பல்வேறு  வாகனங்களில் குடை பிடித்தபடி நிகழ்ச்சிக்கு வந்தனர். மாணவ, மாணவியரை ஏற்றி வந்த பஸ்கள் அனைத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்த கிருஷ்ணா மகால் முன் மாணவ, மாணவியரை இறக்கிவிட்ட பின் சென்றன.

மாணவ - மாணவியர் பாராட்டு:
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி மூலம் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

சரவணன்(செம்பாக்கம்):
மழை பெய்தாலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். குளிரில் நடுங்கியபடி வந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தேர்வு பயம் போனது. குளிரும் போனது.

தமிழ்வாணன்(இல்லலூர்): சுமாராகப் படிக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிக மதிப்பெண் எடுக்க தூண்டுகோலாக உள்ள தினமலருக்கு நன்றி.

ஆனந்தமணிமேகலை(திருப் போரூர்): எவ்வளவுதான் படித்திருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத பயம் மற்றும் குழப்பம் இருந் தது. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச் சிக்கு பின் தெளிவு கிடைத்துள்ளது.

மானீஸ்வர்(திருப்போரூர்):
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் படிக்கனும் என்ற எண்ணம் வந்துள்ளது. நன்றாக படித்து நாங்களும் ஜெயித்துக் காட்டுவோம்.

மெர்லின்(அம்மணம்பாக்கம்):
தேர்வுக்கு நேரம் ஒதுக்குவது எப்படி என்பதை தெரிந்து கொண்டேன். அனைத்து பாடங்களிலும் நூறு மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளதையும் அறிந்து கொண்டேன்.

சுமன்(சாத்தனாஞ்சேரி): தேர்வுக்கு இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிகழ்ச்சி தந்துள்ளது.

நரேஷ்(ஒரக்காட்டுபேட்டை):
எங்கள் பள்ளியிலிருந்து அனைத்து மாணவர்களும் வந்தோம். ஆங்கிலம் பாடத்தில் சுலபமாக தேர்ச்சி பெறுவது எப்படி என தெரிந்து கொண் டேன். இந்நிகழ்ச்சியில், கலந்து கொண் டதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சற்குணம்(கலியபேட்டை): ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட புத்தகங்களை முறையாகப் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறுவேன்.

முயற்சி செய்தால் சாதிக்கலாம் சாதித்த மாணவன் அறிவுரை:
2010ம் ஆண்டு அரசுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட மாணவ மாணவியர் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவன் நிஷால்ரவி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் நிஷால்ரவி. அதே கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தார்.அரசு பொதுத் தேர்வில் 500க்கு 493 மதிப் பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

செங்கல்பட்டில், தினமலர் சார்பில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவன் நிஷால்ரவி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:

முயற்சி திருவினையாக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. அனைவரும் நன்றாக படியுங்கள். 2010ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்ட மாணவ மாணவியர் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில், 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற, செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி பேசும்போது, படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். வெறும் மனப்பாடம் செய்தால் தேர்வின்போது மறந்து விடும். எழுதிப் பார்க்கும்போது மனதில் நிற்கும் என்றார்.

சாதித்த மாணவர்களுக்கு டி.வி.ஆர்., வெள்ளிப்பதக்கம்: 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மாணவன் நிஷால்ரவிக்கு  கல்வியாளர்  ரமேஷ்பிரபா தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு வெள்ளிப் பதக்கம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய அக்னிசிறகுகள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

இரண்டாமிடம் பெற்ற செங்கல்பட்டு மாணவி புவனேஸ்வரிக்கு வங்கி அதிகாரி விஜய்கிருஷ்ணன் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு
வெள்ளிப்பதக்கம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us