தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?

எப்படி அமைய வேண்டும் சமச்சீர் கல்வித் திட்டம்?


UPDATED : நவ 18, 2009 12:00 AM

ADDED : நவ 18, 2009 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2009 12:00 AM ADDED : நவ 18, 2009 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் சாதக, பாதகங்கள் குறித்து சொல்லுமாறு, கருத்து சொல்லலாம் வாங்க என்ற தலைப்பில், தினமலர் நாளிதழ் அறிவிப்பு வெளியிட்டது.


கல்வித்துறை அறிஞர்கள், வல்லுனர்கள், கல்வித் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர்கள், வாசகர்கள் என, பல தரப்பினரும், தங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், பக்கம், பக்கமாக அனுப்பி வருகின்றனர்.கட்டுரைகள், தொடர்ந்து வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்கு, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஏழு பேருக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு.
 
ஒரே வாரத்தில் குவிந்துள்ள ஏராளமான கட்டுரைகளைப் படித்து, அலசி ஆராய்ந்ததில், ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு உபயோகமான கருத்தைக் கொண்டுள்ளது தெரிந்தது.இவற்றில் பல, அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டியவையாகக் கருதப்படுவதால், அவை ஒவ்வொன்றையும், தினமலர் நாளிதழில் வெளியிட, முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில..

நூலகம், இசைக்கு தனி வகுப்பு தேவை : தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வரும், நான்கு அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, பொதுக்கல்வி உருவாக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஐந்து பாடங்களை மட்டுமே படிக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், அதற்கான பாட நூல்களைப் படிக்கும் சூழல் உருவாகும்.தற்போது சாலை விபத்துகள், நாளுக்கு நாள் பெருகி வருகிறது. காரணம், சாலை விதிகளை அறிந்து கொள்வதில்லை; அப்படியே அறிந்திருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதில்லை. சிறுவயதிலேயே சாலைவிதிகள் மற்றும் முதலுதவி கூறி, அவற்றை செயல்முறை விளக்கமாக, பள்ளிகளில் போக்குவரத்து காவலர்களை கொண்டும், ஆம்புலன்ஸ் குழுவினரைக் கொண்டும் செய்து காண்பிக்கலாம்.பாடப்புத்தகங்களையே படித்து, புத்தக புழுவாக இருக்காமல், நூலகம் சென்று உலக தலைவர்கள், அரசியல், ஆன்மிகம், அறிவியல், சமூகநலத் தொண்டர்கள், கல்வியாளர்கள், இவர்களை பற்றியும், நீதி கதைகளையும் படித்து வரலாம். இதற்கென பள்ளிகளில் தனியாக ஒரு நூலகர் நியமனம் செய்து, நூலகத்திற்கென ஒரு பாடவேளை ஒதுக்கலாம்.அதேபோல் இசைக்கென பாடவேளை ஒதுக்கி, தமிழ்த் தாய் வாழ்த்து, கொடிப்பாட்டு, தேசியகீதம் மற்றும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் மற்றும் தமிழ் பாடத்தில் உள்ள பாடல்களை ராகத்தோடு பாடி படிக்கலாம்.குறைந்தது 200 பக்கங்கள் உள்ள பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் நிலை உள்ளது. அதை குறைக்க, மூன்று தேர்வுகளுக்கும் தனித்தனியாக, 30 முதல் 40 பக்கங்கள் கொண்ட புத்தகங்களாக, அந்தந்த தேர்வுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.வழுவழுப்பான தாளில், எழுத்துக்கள் பெரிதாகவும், போதிய இடைவெளிவிட்டும், தேவையான இடங்களில் படங்கள், துணுக்குகள் வண்ணத்தில் அமைக்கலாம். முக்கியமான வார்த்தைகள் தடித்த எழுத்துக்களாலும், வாக்கியங்களை கட்டமிட்டு காண்பித்தால், புத்தகத்தை பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.




தற்போது அறிவியல், கணிதம் புத்தகங்கள், அதிக பக்கம் மற்றும் சிறிய எழுத்துக்களுடன் பார்த்தாலே, மாணவர்களுக்கு வெறுப்பாக உள்ளது. மாணவர்கள் படித்து முடித்து புத்தகத்தை கிழிப்பர்; ஆனால், இன்று புத்தகம் மாணவர்களை கிழிக்கிறது.பாடப் பகுதியின் இறுதியில், வினாக்கள், சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது, கோடிட்ட இடம், பொருத்துக, ஒருவரி வினா விடை, விடுபட்டுப் போன எழுத்துக்களை நிரப்புதல், வார்த்தை கொண்டு வாக்கியங்களை அமைத்தல் போன்ற எளிய வினாக்கள் அமைய வேண்டும்.ஆசிரியர்கள் சொல்கிற தலைப்புகளில், மாணவர்கள் தாமாகவே சிந்தித்து, சொந்த நடையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் புலமை பெற பயிற்சி வழங்க வேண்டும். குருட்டு மனப்பாடம் செய்யும் முறையை கைவிட வேண்டும்.மாணவர்களோடு ஆசிரியர்கள் கலந்துரையாடி, மாணவர்களை பல்வேறு வினாக்கள் கேட்க செய்து, ஆசிரியர்கள் பதில் கூறி, வகுப்பறையை எளிமையாக ஆக்க வேண்டும். மாணவர் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.பள்ளியே சமுதாயத்தின் கண்ணாடியாக விளங்குகிறது. சமுதாய மாற்றத்திற்கு பள்ளி உதவ வேண்டும்; பள்ளியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் சமுதாயம் உதவ வேண்டும்.


- ரெ.லட்சுமி நாராயணன், பட்டதாரி ஆசிரியர்(வரலாறு), புதுக்கோட்டை.



கம்ப்யூட்டர் கல்வி அவசியம்:  படிப்பின் முழுப்பலன், படித்தறிந்த செய்திகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதில் தான் உள்ளது. ஒரு பாட வேளைக்கு, 45 நிமிடம் என்பதை நீக்கி, 90 நிமிடமாக மாற்றுவதன் மூலம், அவசரப் படாமலும், தெளிவாக கற்பிக்கவும், கற்கவும் முடியும்.மாணவர்களுக்கு வழங்கும் இலவச புத்தகத்துடன், டிக்ஷனரி, அட்லசை சேர்த்து கொடுக்கலாம். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தற்போது கம்ப்யூட்டர் பயன்பாடு, இன்றியமையாததால், ஆறாம் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் கல்வி புகட்ட வேண்டும்.தாய்நாட்டுப் பற்று, கடும் உழைப்பை வளர்க்கும் விதமாக, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கடும் சவால்களிலிருந்து மீண்டெழுந்த நாடுகளின் வரலாறு மற்றும் நம் அண்டை நாடுகளின் வரலாறும், பள்ளிக் கல்வியில் கொடுக்கப்பட வேண்டும். மனதை பக்குவமாக வைத்துக் கொள்ள உதவும் யோகா பயிற்சி, கைத்தொழில் ஒன்றையும் கற்றுக் கொடுத்தால் மிகவும் சிறப்பு.நமது நாட்டில், 1965ல் பசுமைப் புரட்சி தொடங்கியது போன்று, 2010ம் ஆண்டு, கல்வியில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.


- வி.மோகன்ராஜ், ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர், சேயூர்.




பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும்: ஆசிரியர் பற்றாக்குறை, திறமையின்மை, புத்தகம் பிரச்னை என, பல பிரச்னைகளை சமச்சீர் கல்வித் திட்டம் நீக்க வேண்டும். "தமிழ்மொழி கல்வி&' எனும் ஆயுதம் எடுத்த தமிழக அரசின் முடிவை, "குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர் விருப்பமே முக்கியம்; அதில் அரசு தலையீடு அனாவசியம்&' என, சுப்ரீம் கோர்ட் முன்பு தீர்ப்பு வழங்கியது நினைவில் இருக்கட்டும்.கிராமம், சூழ்நிலை என்று காரணம் கற்பித்து, பாடங்களை எளிமையாக்கினால், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, பாடம் கடினமாக இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடம் என்பதால், ஒவ்வொரு பள்ளியில் உள்ள ஒவ்வொரு கம்பெனி பாடப் புத்தகங்கள் மூலம், அதேசமயம் கொள்ளையடிப்பது நிறுத்தப்படும்.ஒவ்வொரு பள்ளியும், ஆங்கில இலக்கணத்தை ஒரு பாடமாக நடத்த வேண்டும். இதற்கு ஓய்வுபெற்ற, ஆங்கில அறிவு பெற்ற அதிகாரிகளை நியமித்து, கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்க, வாக்கியம் அமைக்க, மேடை பேச்சு ஆகியவற்றை பயிற்றுவிக்கலாம்.


பாடங்கள் தேர்வு செய்யும் போது, உலக அறிவு முக்கியமானதாக கொள்ள வேண்டும். ஏன், எதற்கு, எப்படி எனும் வினாவின் விடையாக பாடங்கள் அமைய வேண்டும். இந்தி மொழி கண்டிப்பாக கற்பிக்க வேண்டும். வடமாநிலங்களில் பிழைப்பு தேடி செல்வதற்கு கண்டிப்பாக இந்தி மொழி வேண்டும். மாணவர்கள் படிப்பதன் நோக்கம், எதிர்காலத்தில் நிறைய ஊதியத்துடன் உயர் பணியில் சேர என்பது நினைவிருக்கட்டும்.அனைவரும், "பாஸ்&' எனும் அபத்தமுறையை ஒழிக்க வேண்டும். மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்வு எனும் நிலை வரவேண்டும். புத்தக மூட்டைகள் சுமப்பது நிறுத்தப்பட வேண்டும். வினாத்தாள் திருத்தும் ஆசிரியர், சரியாக திருத்தாவிட்டால், கடும் தண்டனை வழங்க வேண்டும். மேலும், எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், துணைவேந்தர் மற்றும் இணைவேந்தர் என, அரசியல்வாதிகளை நியமிப்பதை நிறுத்த வேண்டும்.


- ஆர்.நடராஜன்,வங்கி மேலாளர் (ரெகவரி), கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us