தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனிமேஷன் துறையில் அள்ள அள்ள வேலை வாய்ப்பு!

அனிமேஷன் துறையில் அள்ள அள்ள வேலை வாய்ப்பு!

அனிமேஷன் துறையில் அள்ள அள்ள வேலை வாய்ப்பு!


UPDATED : நவ 23, 2009 12:00 AM

ADDED : நவ 23, 2009 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2009 12:00 AM ADDED : நவ 23, 2009 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால், இத்துறை பற்றிய முழு நேர பட்டப்படிப்பு படித்தவர்கள் குறைவாக உள்ளதால் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன என சென்னை அனிமேஷன் கிரியேட்டிவ் அனிமேட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் இயக்குனர் சுதாகரன் கூறினார்.

அனிமேஷன் படிப்புக் கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலையரங்கில் நடந்தது. மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் அனிமேஷன் அண்டு மீடியா ஸ்டடீஸ் துறை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பெற்றோர், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனிமேஷன் படிப்புகளுக்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் மற்றும் படிப்பு விபரங்களை, நிகழ்ச்சியில் பங்கேற்ற நிபுணர்கள் தெளிவாக விளக்கினர்.

சென்னை அனிமேஷன் கிரியேட்டிவ் அனிமேட்டர்ஸ் நிறுவன இயக்குனர் சுதாகரன் பேசியதாவது: அனிமேஷன் படிப்புக்கு உலகம் முழுவதும் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், தகுதியான மாணவர்கள் இல்லாததால், காலியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்படிப்பை இன்று பலர் ஆறு மாத சான்றிதழ் படிப்பாகவோ, ஓராண்டு கால டிப்ளமோ படிப்பாகவோ படிக்கின்றனர். இதனால் பலன் கிடைக்காது.

மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் அனிமேஷன் துறையில் இப்படிப்பை முழுமையாக கற்றுத் தரும் பி.எஸ்.சி., மூன்றாண்டு படிப்பு உள்ளது. இப்படிப்பு ஒரு டீம் ஒர்க். படிப்பை முடித்து வெளியே வரும் இக்குழுவினர் வேறு பயிற்சிக்கு செல்ல வேண்டியதில்லை. நேரடியாக ஒரு முழு அனிமேஷன் திரைப்படத்தை தயாரிக்க முடியும்.

அந்தளவுக்கு படிக்கும் போதே திரைப்படம் தயாரிப்பதற்கான முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.பட்டப்படிப்பில் மட்டுமே இப்படிப்பை முழுமையாக கற்க முடியும். பிளஸ் 2 க்குப் பின் பெரும்பாலானவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். இதனால், பெங்களூரு, டில்லி, மும்பை மற்றும் சென்னையில் அனிமேஷன் நிறுவனங்களில் உள்ள
காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆள் இல்லை.

மூன்றாண்டு கால படிப்பை முடிப்பவர்களுக்கு, அனைத்து துறைகளிலும் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது. கோவை மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, சுதாகரன் பேசினார்.

அனிமேஷன் படிப்பை பயன்படுத்தி எப்படி கார்ட்டூன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் தெளிவான விளக்கம் அளித்தார், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் அனிமேஷன் அண்டு மீடியா ஸ்டடீஸ் துறையின் ஆலோசகர் மணிகண்ட பூபதி. இதற்கென சாம்பிள் படங்களையும் திரையிட்டு காண்பித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மருத்துவம், இன்டர்நெட், கல்வி, சினிமா, மல்டிமீடியா, கிராபிக்ஸ், கார்ட்டூன், திரைப்பட பின்னணி காட்சிகள், விளம்பரம், டெக்ஸ் டைல்ஸ், கட்டட கட்டுமானம் என அனைத்து துறைக்கும் இன்று அனிமேஷன் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்பே இத்துறை துவங்கி விட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐ.டி., துறைக்குப் போட்டியாக பெரியளவில் வளர்ந்து விட்டது.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஆண்டுக்கு 5,500 கோடி ரூபாய் மதிப்பில் இத்துறையில் நாம் வர்த்தகம் செய்வதாக, நாஸ்காம் அறிக்கை கூறுகிறது.இதன் மூலம் இன்று ஸ்பெஷல் எபெக்ட்ஸ் அனிமேஷன் காட்சிகள் தயாரிப்பதற்கான முக்கிய மையம் ஆக இந்தியா மாறி வருகிறது. இப்படிப்பை சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பாக படிப்பதால் பயன் இல்லை. குறைந்தபட்சம் இப்படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ளவர்கள், கிரியேட்டிவ் சிந்தனை உள்ளவர்கள் இத்துறையில் பெரிதாக சாதிக்கலாம். மூன்றாண்டு பட்டப்படிப்பு முடிப்பவர்கள் துவக்கத்தில் 10 ஆயிரம் சம்பளம் பெறலாம். மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அனிமேஷன் துறையில் எம்.எஸ்.சி., பி.எச்.டி., படிப்புகளையும் முடித்தால் உலகளவில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறலாம். இவ்வாறு, மணிகண்ட பூபதி பேசினார்.

ஆன்லைனில் நுழைவுத் தேர்வு: கல்லூரியின் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா பேசுகையில், இப்படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கு முன்னதாகவே இப்படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 80 இடங்கள் உள்ளன. www.rlinstitues.com  என்ற வெப்சைட்டில் சென்று விண்ணப்பிக்கலாம். பிராசசிங் கட்டணமான 300 ரூபாயை டி.டி., ஆகவோ, national electronic funds transfer(NFET) மூலமோ அனுப்பலாம்.தகுதியான மாணவர்களின் பொது அறிவு, ஆங்கில அறிவை பரிசோதிக்க, ஆன்லைனில் எளிய நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

அனிமேஷன் பற்றிய பத்து கேள்விகளும் இடம் பெறும். மாணவர்கள் தங்கள் திறனை தாங்களே அறிந்து கொள்ளவே இந்த தேர்வு. வெற்றி பெறாதவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

அனிமேஷன் பட்டப்படிப்பு இல்லையே: இளைஞர் உருக்கம்: அனிமேஷன் நிகழ்ச்சியால் கவரப்பட்ட கணபதியை சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில் நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித் துள்ளேன். அனிமேஷன் பற்றிய அறிவு இருந்தாலும், இத்துறையில் பட்டப்படிப்பு இல்லாததால் பணிபுரியும் நிறுவனத்தில் சிரமப்படுகிறேன்.

ஆர்.எல். இன்ஸ்டிடியூட் வழங்கும் மூன்றாண்டு முழு நேர படிப்புதான் இத்துறை குறித்து முழுமையாக அறிய சிறந்த படிப்பு. டாக்டருக்கு படித்தால் மருத்துவமனையில் மட்டுமே பணிபுரிய முடியும். அனிமேஷன் படித்தால் அனைத்து துறைகளிலும் பணிபுரியலாம். இக்கால மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த படிப்பு. கோவை மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, உருக்கத்துடன் பேசினார்.

ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் அனிமேஷன் அண்டு மீடியா ஸ்டடீஸ் சார்பில், கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், கோவை துடியலூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சக்தி அபிராமி முதல் பரிசும், அதே பள்ளியை சேர்ந்த ஆதர்ஷ் இரண்டாம் பரிசும், சாம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கவுதம் ராஜூ மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எல். இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தின் நிர்வாகி ராம்குமார் பரிசுக் கோப்பையும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

மாணவர்கள், பெற்றோர் பிரமிப்பு: அனிமேஷன் படிப்பில் சேருவது குறித்த விபரங்களை, மதுரை சுப்பலஷ்மி லஷ்மிபதி அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீனிவாசன் அளித்தார்.அவர் பேசுகையில், பிளஸ் 2 படித்தவர்கள் பி.எஸ்.சி., அனிமேஷன் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்.எல். இன்ஸ்டிடியூட்டில் இப்படிப்புக்கான அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.

பல ஆண்டுகள் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். தன்னாட்சி பெற்ற கல்லூரி என்பதால் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்கிறோம். படிப்பு முடித்தவர்களுக்கு வேலை பெற்றுத் தருகிறோம். படிப்பில் சேர வங்கிக் கடன் பெறவும் உதவுகிறோம். ஆண்கள், பெண்களுக்கு சுகாதாரமான உணவுடன் தனித்தனி ஹாஸ்டல் வசதி உண்டு என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோரும் மாணவர்களும், அனிமேஷன் படிப்புக்கான வாய்ப்புகளை கேட்டு பிரமித்தனர். இந்த படிப்பில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என ஆச்சரியப்பட்ட அவர்கள், படிப்பு குறித்த தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம்கேட்டுப் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us