தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் நானோ டெக்னாலஜி துறை துவக்கம்

வேளாண் பல்கலையில் நானோ டெக்னாலஜி துறை துவக்கம்

வேளாண் பல்கலையில் நானோ டெக்னாலஜி துறை துவக்கம்


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை வேளாண் பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா நடந்தது. மொத்தம் 1,090 மாணவ மாணவியர் பட்டம் பெற்றனர். 22 மாணவர்கள் சிறப்பு விருதுகள் பெற்றனர். தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.


விழாவில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய ஆதாரமாக விளங்கும் விவசாயம், இன்று வீழ்ச்சி அடைந்து வருகிறது. 1982-1983ல் 17.8 சதவீதமாக இருந்த இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2007-2008ல் 17.8 சதவீதமாக குறைந்துள்ளது. மண்ணரிப்பு, குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம், குறைந்து வரும் பாசனப் பகுதி, காலநிலை மாற்றங்கள் ஆகியவை இத்துறை சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகள்.


பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து வருவதால் அரிசி, கோதுமை, கரும்பு, பருப்பு ஆகியவற்றின் உற்பத்தி குறைந்து வருகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையினர் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதில் கோவை வேளாண் பல்கலையின் பங்கு முக்கியமானது. இதுவரை இப்பல்கலை 292 பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. 2009ல் இப்பல்கலை 11 பயிர் ரகங்கள் மற்றும் நான்கு நவீன இயந்திரங்களை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. காலத்துக்கேற்ற புதிய கல்வி முறைகளை அறிமுகம் செய்வதிலும் வேளாண் பல்கலை சிறந்து விளங்குகிறது. ‘ஆன்லைன்’ தேர்வு முறை இதில் முக்கியமானது.


பி.டி.காட்டன் ரகம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இத்தொழில் நுட்பத்தின் பயன்களை உணர்ந்த பின் பி.டி.காட்டன் ரகம் இன்று பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாட்டில் பயிரிடப்படும் மொத்த பருத்தியில் 80 சதவீதம் பி.டி.காட்டன் இடம் பிடித்து விட்டது.


இத்தொழில்நுட்பத்தால் இன்று பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்துவது குறைந்து விட்டது. பருத்தி பயிரிடுவதில் உள்ள செலவு குறைந்து, விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வருகிறது. இதனால் பி.டி.காட்டன் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது. 2001-2002ல் கிடைத்ததை விட இன்று இரட்டிப்பு மகசூல் கிடைத்துள்ளது.


ஒருகாலத்தில் பருத்தியை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இன்று ஏற்றுமதி செய்து வருகிறது. பி.டி. பருத்தியைப் போல், பி.டி.கத்தரிக்காய் உற்பத்தியிலும் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலை நான்கு பி.டி.கத்தரிக்காய் ரகங்களை உருவாக்கியுள்ளது. இவை இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வகை காய்கள், சாப்பிடுபவருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. இதனால் மத்திய அரசின் ஜெனடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டி, வர்த்தக ரீதியாக பி.டி.கத்தரியை பயிரிட பரிந்துரை செய்துள்ளது.


தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிர் ரகங்களின் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்துவதில் பயோ டெக்னாலஜி துறைக்கு முக்கிய பங்கு உள்ளதை தெரிந்து கொள்ளலாம். இதை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்து, வேளாண் துறை வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.


வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசுகையில், “வேளாண் துறையில் ஆராய்ச்சிகளை முடுக்கி விட, இப்பல்கலையில் சமீபத்தில் புதிதாக நானோடெக்னாலஜி துறை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களில் நானோடெக்னாலஜி பயிற்சி பெற்ற 11 விஞ்ஞானிகள் இத்துறையில் பணிபுரிகின்றனர். 10.45 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன லேப் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளிலும் நானோடெக்னாலஜி பாடத்திட்டம் உட்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.


தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us