UPDATED : நவ 29, 2009 12:00 AM
ADDED : நவ 29, 2009 01:16 PM
பத்தாம் வகுப்பு மெட்ரிக், உயிரியல் பாடம் குறித்து எஸ்.பி.ஓ.,ஏ., பள்ளி ஆசிரியை கீதா கோபிநாத் பேசியதாவது:
நாம் என்ன படிக்கப்போகிறோம், அதன்பின்பு படித்ததை எப்படி தேர்வில் எழுத வேண்டும், தேர்வு எழுதுவதற்குரிய கால நேரம், தேர்விற்கு எத்தனை நாட்கள் உள்ளது என்பதை கணக்கீடு செய்து அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம். தாவரவியல் பாடத்திலுள்ள பாடங்களை பகுதி வாரியாக பிரித்து, முதல் பாதி, நடுபாதி, பின்பாதி என்று மூன்றாக பிரித்து படிக்க வேண்டும்.
கேள்வித்தாளை வாங்கியதும் 5 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விற்கு, ஒரே வார்த்தையில் சுருக்கமாக பதிலளிக்கவேண்டும். ஒரு நிமிடத்தை மட்டுமே அதிகபட்சமாக செலவிடுதல் அவசியம். உடற்செயலியல்(பிசியாலஜி) சம்பந்தமான கேள்விகளுக்கு சரியாக படங்களை வரைந்து அதற்குரிய பாகங்களை அடையாளமிட்டு எழுதுதல் அவசியம்.
கேள்விக்குரிய பதிலை வழ வழ என்று எழுதாமல், பாயின்ட் அவுட் செய்து எழுதினால் நிறைய மதிப்பெண் பெறலாம். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு படம் வரைந்து பாகம் குறித்து எழுதவேண்டும். படத்திற்கு மூன்று மதிப்பெண் கிடைக்கும், எழுதப்பட்ட சரியான பதிலுக்கு 2 மதிப்பெண் கிடைக்கும். 10 மதிப்பெண் கேள்விகளுக்கு படத்தை சரியான அளவில் வரைந்து பாகம் குறிப்பதோடு, சுருக்கமாக அனைத்து விஷயங்களையும் பதிலில் குறிப்பிடவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
வேதியியலில் தேவையான இடத்தில் சமன்பாடுகளை குறிப்பிடாவிட்டால் சரியான மதிப்பெண் கிடைக்காது என்று எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியை நிர்மலா தினகரன் பேசினார். அவர் பேசியதாவது:
பிசிக்கல், இன்ஆர்கானிக், ஆர்கானிக், என்விரான்மென்டல் என்று நான்கு பகுதிகளாக வேதியியல் உள்ளது. இதில் எதையும் விட்டு வைக்க முடியாது. முழுமையாக கரைத்துக் குடிக்க வேண்டும். நான்கு பகுதியிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். மற்ற பாடங்களை போல மனப்பாடம் செய்யும் பாடமல்ல வேதியியல். புத்தகத்தில் எப்படிப்பட்ட சமன்பாடுகள் குறிப்பிட்டுள்ளதோ அதே போல தேர்வில் குறிப்பிடவேண்டும். அதற்கு இடையிடையே விளக்கம் (டெபனிசன்) கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பெண் ரத்து செய்யப்படும்.
நீங்கள் அளிக்கும் பதில் தெளிவாக விளக்கமாக இருக்க வேண்டும். பதிலை அடிக்கோடிட்டு குறிப்பிடவேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகளை நன்கு புரிந்து அதன் பின்பு எழுத வேண்டும். மற்ற பாடங்களை போல புரிந்து கொள்ளாமல் எப்படியோ நீந்தி கரை சேரலாம் என்று நினைப்பது தவறு. படிப்பிற்கு தேவையான புத்தகங்கள், கைடுகள், படங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொண்டு அதன் பின்பு படிப்பது நல்லது.
வீட்டில் அடிக்கடி சுயமாக வினாத்தாள் தயாரித்து மாதிரி தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள், முக்கிய சேப்டர்களிலிருந்து மட்டுமே எடுக்கப்படும். அதனால் இரண்டு சேப்டர்கள் தவிர்த்து மற்றவற்றிலுள்ள கேள்வி பதில்களை படிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தினகரன் பேசினார்.
படிப்பை போட்டியாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக படித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று எஸ்.பி.ஓ., ஏ., பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுஜாதா தெரிவித்தார். அவர் பேசியதாவது:
இயற்பியலில் மொத்தம் 7 சேப்டர் உள்ளன. அதில் 5 சேப்டர்களை தேர்வு செய்து, நம்மால் படிக்க முடியும் என்கிற அளவுக்குப் படிக்க வேண்டும். மீதமுள்ள இரண்டு சேப்டர்களை ஆசிரியர் உதவியோடு தெளிவு படுத்தி முக்கியமான வினாக்களுக்குரிய பதில்களை படித்து வைப்பது நல்லது. புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அந்த வார்த்தைகளையும், பதில்களையும் குறிப்பிட்டு எழுத வேண்டும்.
புத்தகத்தில் இல்லாத விஷயங்களை, சொந்தமாக எழுதுவது தவறு. இதில் ஒளி, ஒலி, மெக்கானிக் போன்ற சேப்டர்களில் ஏராளமான கொள்கைகள் உள்ளன. அவற்றை மனப்பாடம் செய்வதோடு அதற்குரிய பொருளை பிழை படாமல் விடைத்தாளில் எழுதவேண்டும்.
ரூதர்போர்டு ஆல்பர் பாரடியல் என்றும், மற்றொன்று ரூதர்போர்டு எக்ஸ்பிரிமென்ட் என்று இரண்டு கொள்கைகள் இருக்கும். அதை வித்தியாசப்படுத்தி புரிந்து படிப்பது நல்லது. தேர்வில் கேள்வியை புரிந்து பதிலளிக்க வேண்டும் தேர்வை முழு நம்பிக்கையோடு எழுதவேண்டும். படங்களை பெரிதாகவோ மிகவும் சிறியதாகவோ வரையக்கூடாது. சரியான அளவில் வரைவது அவசியம். சமன்பாடுகள், தீர்வுகள் நன்கு தெரிந்தால் மட்டுமே அதனுள் நுழையவேண்டும். இல்லாவிட்டால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது.
சமன்பாடுகளுக்கு முன்பு பார்முலாக்களை எழுத வேண்டும். அதை வரிசைக்கிரமமாக எழுதி சரியான முறையில் நிறைவு செய்ய வேண்டும். வரிசையில் ஸ்டேஜ் பை ஸ்டேஜ் குறிப்பிடுவது அவசியம். படிப்பை போட்டியாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாக படித்தால் நீங்கள் நிச்சயம் ஜெயித்துக்காட்டலாம்.இவ்வாறு ஆசிரியர் சுஜாதா பேசினார்.
தமிழ்தானே என்று அலட்சியமாக விட்டு விட வேண்டாம், அய்யோ தமிழா என்று பயப்பட வேண்டாம்; எளிதாக படித்து வெற்றி பெறலாம் என்று எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியை உமாராணி பேசினார்.
அவர் பேசியதாவது: அதிக மதிப்பெண்களை எளிமையாக பெறும் பாடம் தமிழ். மற்ற பாடங்களை காட்டிலும் எளிதாக திருத்தலாம். அதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். கேள்வித்தாள் வரிசையின் படி பதில்கள் சரியாக இருந்தால் திருத்த எளிதாக இருக்கும். மாணவர்கள் வரிசைப்படி பதில் எழுத வேண்டும்.
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு முழுமையாக பதில் எழுத வேண்டிய அவசியமில்லை. பதிலை மட்டும் தெளிவாக குறிப்பிடவேண்டும். மனப்பாடபகுதியை அடி பிறழாமல் எழுதுவது அவசியம். எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, சந்திப்பிழை இல்லாமல் எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். செய்யுள் பகுதியில் எப்படியும் ஒரு கட்டுரை கேள்வி வரும். அதற்கும் கம்பராமாயணம், ரட்சணிய யாத்திரிகம், திருக்குறள் ஆகியவற்றை நன்கு படித்து தெளிவாக எழுதலாம். பொருத்துக பிரிவில் பதிலை மட்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது.
கருப்பு மை, நீல மை பயன்படுத்தி வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். உரை நடை பகுதியில் 1 முதல் 5 வரை, 6 முதல் 10 என்று இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவை நன்கு படித்து வைத்திருந்தால் தேர்வில் வரும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம். இரண்டாம் தாளில் துணைப் பாடக் கட்டுரையிலும் இதே முறையை பின் பற்றலாம். கட்டுரையில் முன்னுரை, பொருளுரை, முடிவுரை வேண்டும். இடையே துணைத்தலைப்புகளில் பல விஷங்களை குறிப்பிடவேண்டும். முடிவுரையில் கட்டுரையின் சாராம்சம் இருக்க வேண்டும்.
முன்னுரையில் ஆசிரியரைப் பற்றி குறிப்பிடுவது அவசியம். மடல் பகுதியில் புகார், விண்ணப்ப, உறவுமுறை என்று மூன்று வகை கடிதங்கள் உள்ளன. உறவு முறை கடிதத்தை தவிர்த்து, மற்ற இரண்டுமுறை கடிதத்தில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து எழுதலாம். அதில் தேதி, அனுப்புனர், பெறுனர், தங்கள் உண்மையுள்ள போன்ற விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.விடைத்தாளில் ஒயிட்னர் பயன்படுத்த வேண்டாம்.
தேவையில்லாத பகுதியை கிராஸ் செய்து விடவும்.தமிழ் தானே என்று அலட்சியமாக விட்டு விட வேண்டாம், அய்யோ தமிழா என்று அச்சமும் வேண்டாம். எளிதாக படித்து வெற்றி பெறலாம்.இவ்வாறு ஆசிரியை உமாராணி பேசினார்.
