UPDATED : டிச 01, 2009 12:00 AM
ADDED : டிச 01, 2009 03:18 PM
மதுரை: அண்ணா பல்கலை., மற்றும் பி.எஸ்.என்.எல்., இணைந்து மொபைல் போன் தகவல் தொடர்பு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்க உள்ளது.
இந்திய அளவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 400 மில்லியனுக்கு மேல் மொபைல்போன்கள் புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 80 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இவை தவிர தற்போது பி.எஸ்.என்.எல்., மூலம் மூன்றாம் தலைமுறை தகவல் தொடர்பான 3 ஜி இணைப்பும் பி.எஸ்.என்.எல்., மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொபைல்கள் மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி இத்துறையில் வேலை வாய்ப்புக்காக கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் போன் குறித்த சான்றிதழ் படிப்பு ஒன்றை துவக்க அண்ணா பல்கலை முன்வந்துள்ளது. அண்ணா பல்கலையில் உள்ள தொழில் கூட்டமைப்பு அமைப்பு பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைந்து இப்படிப்பை துவக்க உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வுக்காக இரு கருத்தரங்குகள் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை அண்ணா பல்கலைகளில் நடந்துள்ளன.
இதையடுத்து மொபைல் போன் தகவல் தொடர்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நவ. 30 முதல் டிச. 6 வரை மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லூரி, ராஜா பொறியியற் கல்லூரி, விக்ரம் பொறியியற் கல்லூரியில் நடக்க உள்ளன. பயிற்சியில் 3 நாள் மொபைல் தகவல் தொடர்பு குறித்தும், 2 நாள் நவீன வசதிகள் குறித்து செயல் விளக்கமும், 2 நாள் தொழில் நுட்பம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பி.எஸ்.என்.எல்., அமைப்பின் ராஜிவ் நினைவு தொலை தொடர்பு பயிற்சி மையம், சென்னை அண்ணா பல்கலை.,யில் இருந்து நிபுணர்கள் கருத்தாளர்களாக செயல்படுவர்.
