UPDATED : டிச 06, 2009 12:00 AM
ADDED : டிச 06, 2009 10:13 AM
அரசியல் சட்டத் திருத்தம் 2006ன் படி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் ஓ.பி.சி., மாணவர்களுக்கு கட்டாய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதற்கு சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் மட்டும் விதிவிலக்கு.ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜே.எம்.ஐ.,) என்ற இஸ்லாமிய பல்கலைக்கழகம், சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. அது மத்திய பல்கலைக் கழகமாகத் தான் இயங்கி வருகிறது.
ஜாமியா பல்கலை, ஓ.பி.சி.,க்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி., அறிவுறுத்தியிருந்தது. இதை ஏற்க மறுத்தது ஜாமியா பல்கலை. இதனால், பல்கலையின் திட்டமிடப்படாத செலவுகளுக்கான மானியத்தை வழங்க முடியாது என்று மறுத்துவிட்டது.இதுபற்றி பல்கலைக்கு யு.ஜி.சி., அனுப்பிய அறிக்கையில், ஜே.எம்.ஐ.,ல் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 19ல் மத்திய அதிகாரக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டது; பின்னர் உறுதி செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை வழங்காவிடில், 2010-2011க்கான திட்டமிடப்படாத செலவுகளுக்கான மானியத்தை வழங்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, ஜாமியா சிறுபான்மை அந்தஸ்து ஒருங்கிணைப்பு கமிட்டி முன் விவாதத்துக்கு வந்தது. அந்தக் கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் கலந்துகொண்டார். இந்த விவகாரம் கோர்ட்டிலும் அதற்கு வெளியிலும் இரண்டு வகையாகவும் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார். இட ஒதுக்கீடு வழங்கப்பட முடியாது என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு, பல்கலையின் விவரக் குறிப்பேட்டிலும் அச்சிடப்பட்டுவிட்டது என்று ஜே.எம்.ஐ., தெரிவித்தது.தேசிய சிறுபான்மையினர் கல்விக் கழகங்கள் கமிஷனில், (என்.சி.எம்.இ.ஐ.,) ஜே.எம்.ஐ., தன்னை சிறுபான்மைக் கல்வி நிறுவனம் என்று அங்கீகரிக்க வேண்டும் என்று மனு செய்துள்ளது.
என்.சி.எம்.இ.ஐ.,யின் வரம்பில் பல்கலைகள் வரமுடியாது என்பதால் அங்கும் ஜே.எம்.ஐ.,யின் மனு நிராகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் யு.ஜி.சி.,யின் அதிரடியான அறிவிப்பாலும் அந்த மனு தள்ளுபடியாகலாம்.
